தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பாஜகவில் சேர காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திமுக எம்.பி. திருச்சி சிவாவை ‘பளார்’ விட்ட எம்.பி. சசிகலா புஷ்பாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதன் பிறகு, ‘எம்.பி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் என்னை அடித்தார்கள்’ என மாநிலங்களவையிலேயே பேசி அதிமுகவையே கலங்கடித்தவர்தான் சசிகலா புஷ்பா. 

தன் பேச்சை கேட்காத அவரை, கட்சியை விட்டே நீக்கினார் ஜெயலலிதா. திடீரென வழக்கறிஞர் பி.ராமசாமி என்பவரை இரண்டாம் திருமணம் செய்தும் தடாலடி காட்டினார். இவரது பதவிக்காலம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையப் போகிறது. இடையில் அதிமுகவில் சேர முயற்சிகள் செய்தும் கைகூடவில்லை. இன்னும் ஓராண்டில் எம்.பி. பதவி முடிவடையும் நிலையில், அரசியல் வாழ்க்கை குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

எனவே தற்போது பாஜகவை நோக்கி அவரது பார்வை குவிந்திருப்பதாகத் தெரிகிறது. அவரது இரண்டாவது கணவர் ராமசாமி மூலம் பாஜகவில் இணையும் முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகின்றன. நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க, 'மோடி ஃபார் பி.எம்.' என்கிற பிரச்சார இயக்கத்தை பாஜகவினர் முன்னெடுத்து செல்கின்றனர். இந்தப் பிரசார இயக்கத்தின் தென்னக இணை ஒருங்கிணைப்பாளராக சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி உள்ளார்.

 

இதுபோக, ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பிலும் உள்ளார். இதனால் அவர் மூலமாக பாஜகவினரோடு சசிகலா புஷ்பா நெருக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. எனவே சசிகலா புஷ்பா விரைவில் பாஜகவில் சேர்ந்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், எம்.பி. பதவி இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளதால், தற்போது கட்சி மாறினால், பதவி பறிபோகும் வாய்ப்பும் உள்ளது. எனவே அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பாஜகவில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.