மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக ஆதிக்கம் செலுத்திவருகிறது. பாஜகவின் மீது எதிர்க்கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் பாஜகவை அசைக்க முடியவில்லை. 

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, இனவாதம் என பாஜக மீது ஏராளமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் மற்ற எதிர்க்கட்சிகளும் வாக்கு சேகரித்தன. 

ஆனால் மக்கள் பாஜகவையே மீண்டும் அங்கீகரித்து மீண்டும் ஆட்சி பொறுப்பை கொடுக்க முடிவெடுத்துள்ளனர். வேலூரை தவிர நடந்த 542 தொகுதிகளில் 340க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. வெறும் 90 தொகுதிகளில் தான் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை விட அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பதால் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைவது உறுதியாகிவிட்டது. மோடி, அமித் ஷா ஆகிய இருவரும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட சுமார் ஒன்றே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர். 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, முன்னாள் பிரதமரும் முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவெகௌடா, மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பாஜக வேட்பாளர்களை விட மிகவும் பின் தங்கியுள்ளனர். 

பாஜகவை வீழ்த்த நினைத்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மரண அடி அடித்துள்ளது பாஜக.