பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்த பிறகு மூன்று எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் வகையில் அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது.


தமிழகத்தில் நடைபெற உள்ள 4  தொகுதி இடைத்தேர்தலைவிட பரபரப்பை கிளப்பியிருக்கிறது, 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சபாநாயகர் தனபாலிடம் கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார். மே 23-ம் தேதி தமிழக நாடாளுமன்றம் மற்றும் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக ஆட்சி நீடிக்குமா இல்லையா என்பது தெரியவரும். 
தற்போதைய நிலையில் 114 உறுப்பினர்களின் ஆதரவு அதிமுகவுக்கு இருந்தாலும், அதில் மூன்று பேர் தினகரனுக்கு ஆதரவாக உள்ளார்கள். இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் எடப்பாடி அரசுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை கழித்துவிட்டால் அதிமுகவின் பலம் 109 ஆகக் குறையும். சபாநாயகர் பொதுவானவர் என்பதால், அதிமுக பலம் 108 ஆக குறைந்துவிடும். மே 23-க்கு பிறகு அதிமுகவுக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைக்க முடியும். 
இதனால், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 22 தொகுதிகளில் அதிமுக 10 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்நிலையில் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால், சபை எண்ணிக்கை 231 ஆகக் குறையும். அப்போது அதிமுகவுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. 8 தொகுதிகளில் வெற்றி கிடைத்துவிடும் என்று அதிமுக உறுதியாக நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவகாரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது.
தற்போது கட்சித் தாவல் புகாருக்கு ஆளாகியுள்ள 3 எம்.எல்.ஏ.க்களும் திடீரென்று தினகரனுக்கு ஆதரவாக  செயல்பட்டவர்கள் கிடையாது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படும்போதே தினகரனுக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். ஆனால், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் காரணமாக அதிமுக ஆட்சிக்கு இருந்த சிக்கல் நீங்கியதால், இவர்களைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆனால், தற்போது இடைத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்பதால், இவர்களுடைய பதவியையும் பறிக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக தேர்தல் முடிவு அதிமுகவுக்கு பாதகமாக இருக்கும் என்று உளவுத் துறை கொடுத்த அறிக்கைக்கு பிறகு இந்த நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை  முதல்வருமான ஓபிஸ், வாரணாசியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டால் சமாளிப்பது பற்றி பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதால், இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா என்ற பரபரப்பு இன்னும் கூடியிருக்கிறது.