திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு தனது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றதை பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.  

திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த தலைவர்களுள் ஒருவருமான கே.என்.நேரு அவரது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற கே.என்.நேரு, பின்னர் அறிஞர் அண்ணா மற்றும் மறைந்த தலைவர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதிலிருந்தே அவர் மீது நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. அவருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த புகைப்படங்களை அவருடைய ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து, உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற்றபோது என குறிப்பிட்டுள்ளார்.

 

கே.என்.நேரு உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவிக்கும் புகைப்படத்தையும், எல்.கே.அத்வானியின் பிறந்தநாளில் பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, ஆசிர்வாதம் பெற்றதையும் குறிப்பிட்டு, இரண்டு வெவ்வேறு கட்சிகளில் உள்ள வெவ்வேறு தலைவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவர், அவரது ஆசானை சந்திக்க செல்வதாகவும் இன்னொருவர் கட்சியின் தலைமையகத்துக்கு சென்று அடுத்த தலைமுறை தலைவரிடம் இருந்து ஆசிபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், அண்னாமலையின் இந்த பதிவை சிலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் வருகின்றனர். குறிப்பாக மோடி போன்ற ஒரு தலைவரை கே.என். நேருவோடு எப்படி ஒப்பிட முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், கே.என்.நேருவின் ஆதரவாளர்களோ, பிரதமர் மோடி எல்.கே.அத்வானிக்கு வணக்கம் செலுத்தாமல் சென்ற புகைப்படத்தை பகிர்ந்து, அண்ணாமலையை விமர்சனம் செய்துவருகின்றனர். 

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவரது பிறந்தநாளுக்கு, மறைந்த திமுக பொதுச் செயலாளரும், கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் க.அன்பழகனின் வீட்டிற்கு நேரிலேயே சென்று வாழ்த்துப்பெறுவார். அதைப்போல பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்தநாளுக்கும் அவரது வீட்டிற்கே நேரில் சென்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துவார். தமிழக அரசியல் வரலாற்றில் முதலமைச்சராக இருக்கும் ஒருவர் கட்சியில் இருக்கும் இன்னொரு தலைவரை நேரில் சென்று வாழ்த்துவது சுயமரியாதை உணர்வுக்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டது. ஆனால் தேர்தல் அரசியலால் சுயமரியாதை இயக்கத்தின் வரும் தலைமுறையினரிடம் சுயமரியாதை உணர்வும், ஜனநாயகமும் குறைந்து வருவது கவலை அளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.