binarayee vijayan give reply to amith sha

பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலமும் வளர்ச்சி குறியீட்டில் கேரளா பெற்றுள்ள சர்வதேச தரத்தை எட்டவில்லை என்றும் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இடம் இருந்து கேரளா, கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இடதுசாரிகளால் பா.ஜ.க.வினர் தொடர்ந்து கொல்லப்படுவதாகக் கூறியும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் அக்கட்சியினர், ஜன் ரக் ஷா யாத்திரையை நடத்தினர். இதனை பாஜக தேசிய தலைவர், அமித்ஷா கடந்த 3-ஆம் தேதி கண்ணூரில் தொடங்கிவைத்தார்.

இந்த யாத்திரையின் நிறைவு விழா நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது,கேரளாவில் ஆளும் இடது சாரி அரசாங்கத்தையும் முதல் மந்திரி பினராயி விஜயனையும் கடுமையாக விமர்சித்தார். கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி அமையும் போதெல்லாம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டினார்..

அரசியலில் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதால் மக்கள் குறுகிய காலத்தில் இடதுசாரிகளை கேரளாவில் இருந்து தூக்கியெறியும் நிலை வரும் என்று தெரிவித்த அமித்ஷா, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் எந்த மாநிலமும் வளர்ச்சி குறியீட்டில் கேரளா பெற்றுள்ள சர்வதேச தரத்தை எட்டவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இடம் இருந்து கேரளா, கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற கொள்கைகளால் தனது இதயம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக வெறுப்பு மற்றும் மத சித்தாந்தங்களை மட்டுமே கொண்டுள்ளது என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.