மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், கேரளாவில் மருத்துவம் செய்வதற்கு நல்ல மருத்துவமனைகள் இல்லையா என்றும், இங்குள்ள மருத்துவர்களை முதலமைச்சர் நம்பவில்லையா என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த மார்ச் 3ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பினார்.இந்நிலையில் மேற்கொண்டு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில்  உள்ள மின்னசோடா மாகாணத்தின் Rochester நகரில் உள்ள Mayo Clinic என்ற மருத்துவமனைக்கு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி கிளம்புகிறார்.

மொத்தம் 17 நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவிட்டு செப்டம்பர் 6ஆம் தேதி மீண்டும் திரும்புகிறார். அவருடன் அவரது மனைவி கமலா விஜயனும் உடன் செல்கிறார். மருத்துவ சிகிச்சைக்கான மொத்த செலவையும் மாநில அரசே ஏற்க உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் கொச்ஜோசப் சிட்டில்பிள்ளை என்பவர், மருத்துவ சிகிச்சைக்காக பினராயி விஜயன், அமெரிக்கா  செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூலில், வெளியிட்டுள்ள பதிவில், சில ஆண்டுகளுக்கு முன்பு V.Guard  நிறுவனத்தில் நடைபெற்ற  வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தன்னை “ அமெரிக்க செருப்பு நக்கி “  என மிக கேவலமாக திட்டினர். தற்போது அந்த அமெரிக்காவுக்குத்தான் டிரீட்மெண்ட்டுக்கு செல்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று நெட்டிசன்களும் பினராயி விஜயன் அமெரிக்கா செல்வததை கிண்டல் செய்துள்ளனர். கேரளாவில் உள்ள டாக்டர்களை விட அமெரிக்க டாக்டர்களைத் தான் பினராயி விஜயன் நம்புகிறாரா ? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சிபிஎம் கட்சியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தார் வருமுன் காப்போம் திட்டத்தில் அனைவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்கள், அது பொது மக்களுக்குத்தானா, முதலமைச்சருக்கு இல்லையா ? என்றும்  நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர்.