மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமையன்று காலை 8 மணி அளவில் யாருமே எதிர்பாராத வண்ணம் அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக முந்தையநாள் நள்ளிரவில் ஏகப்பட்ட வேலைகள் நடந்தது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததை சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இருளில் பாவ காரியங்கள்தான் அரங்கேறும் என கட்சிகள் பா.ஜ.க.வை கடுமையாக தாக்கின. இந்நிலையில், இரவின் மத்தியில்தான் பல நல்லகாரியங்கள் நடக்கும் என மகாராஷ்டிரா பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

சுஷில் மோடி இது தொடர்பாக டிவிட்டரில், மகாராஷ்டிராவில் இரவு நேரத்தில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டதை மற்றும் புதிய அரசு அமைந்ததை விமர்சனம் செய்தவர்கள், இந்தியா தனது சுதந்திரத்தை நள்ளிரவில் பெற்றதையும், இங்கிலாந்து கொடி இரவில் இறக்கப்பட்டதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நவராத்திரி சமயத்தில் மேற்கொள்ளப்படும் சக்தி பூஜை மற்றும் தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படும் லட்சுமி பூஜை இரவில்தான் நடைபெறும். மக்களை தங்களது வரலாறு மற்றும் கலாச்சாரத்திலிருந்து எப்படி துண்டிக்க முடியும்? என பதிவு செய்து இருந்தார்.