பாஜக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸின் கை ஓங்கியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கடும் இழுபறி நீடித்துவந்த நிலையில், அங்கும் காங்கிரஸின் கை ஓங்கியுள்ளது. 

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கடும் பின்னடைவை சந்தித்திருப்பது அக்கட்சிக்கும் மிகப்பெரிய அடி. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்துவருகிறது. 

இதில், பாஜக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் 100 தொகுதிகளிலும் பாஜக 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 

அதேபோல பாஜக ஆட்சியில் இருந்த மற்றொரு மாநிலமான சத்தீஸ்கரில் காங்கிரஸ் 58 தொகுதிகளில் முன்னிலை வகித்துவரும் நிலையில், பாஜக வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

பாஜக ஆட்சியில் இருந்த மற்றொரு மாநிலமான 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், அங்கும் 10.45 மணி நிலவரப்படி காங்கிரஸின் கை ஓங்கியிருக்கிறது. காங்கிரஸ் 115 தொகுதிகளிலும் பாஜக 100 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களை கைப்பற்றியது பாஜக. இப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து மாநிலங்களை கைப்பற்றிவந்த பாஜக, மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஆட்சியில் இருந்த மாநிலங்களை இழப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு.