நீதிமன்ற உத்தரவை மீறி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்ற கூட்டத்தில் அனுமதியின்றி வழிநெடுகிலும் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால். இவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’ காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று பலரும் பேனர் தங்களுக்கு பேனர் வைப்பது குறித்து அதனை தவிர்க்கவும் அறிவுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். கோட்டகம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தை முன்னிட்டு, வழிநெடுகிலும் ஏராளமான பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அனுமதி பெறாமலேயே பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே, விநாயகர் ஊர்வலத்தை தடுத்த போலீசாரை எதிர்த்து ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத்  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.