பல நாள் திருடன், ஒருநாள் அகப்படுவான் என்பார்கள். அதற்கேற்றாற்போல, பணி நியமனங்களுக்கு லஞ்சம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்த பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைதாகியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, லஞ்சம் பெற்று கைதாகியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என பணியின் நிலைகளுக்கு ஏற்ப லஞ்சம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் கணபதி.

இதுதொடர்பாக பலமுறை பலர் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு பல புகார்களை கொடுத்துள்ளனர். ஆனால், கணபதிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் லஞ்ச ஒழிப்பு துறையினரால் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

அதற்காக பொறி வைத்து காத்திருந்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் கணபதியின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சில ஊழியர்களிடமிருந்தும் ஆதாரங்களை திரட்டி வந்துள்ளனர். சரியான தருணத்திற்காக காத்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையிடம், சுரேஷிடம் லஞ்சம் கேட்டு நச்சரித்து மாட்டிக்கொண்டார் கணபதி.

தன் மீது பல புகார்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்திருந்தும் கூட அதை பற்றியெல்லாம் சற்றும் கவலை கொள்ளாமல், லஞ்சம் வாங்குவதை தன் கடமையென கருதி செயல்பட்டுள்ளார் கணபதி. உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொடுத்த சுரேஷ், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார்.

மீத பணத்துக்காக, கணபதி விடாமல் சுரேஷை நச்சரிக்க, சுரேஷிடம் 29 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்து, அதை கணபதியிடம் அவர் கொடுக்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

லஞ்ச புகாரில் கைது செய்யப்படும் இரண்டாவது துணைவேந்தர் இவர். இதற்கு முன்னதாக 2006ம் ஆண்டு கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்..?