"மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். அவருடைய தனிப்பட்ட கருத்தை அவர் எழுதியுள்ளார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மோடியை புகழ்ந்த இளையராஜா

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார். 

டிடிவி தினகரன் ஆதரவு

இளையராஜாவின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு சாரார் இளையராஜாவை விமர்சித்தும், அவருக்கு கண்டனம் தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் கூறுகையில், “அது இளையராஜாவின் சொந்த கருத்து. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். அவருடைய தனிப்பட்ட கருத்தை அவர் எழுதியுள்ளார். இதை சர்ச்சைக்குள்ளாக்குவது சரியல்ல” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

களமிறங்கிய பாஜக 

பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதிய இளையராஜாவை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வரும் நிலையில், பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவினர் பதிவிட்டும், இளையராஜாவை விமர்சிப்போருக்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்கள்.