மிகவும் அரிதான “எச்.எச்.” நெகட்டிவ் அல்லது “பாம்பே ெநகடிவ்” ரத்தத்தை சென்னை கர்பிணிப் பெண்ணுக்கு தக்க நேரத்தில் கொடுத்து பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

வழக்கமாக ரத்த வகைகளில் ஏ, பி, ஏபி, மற்றும் ஓ பிரிவுகள் பொதுவானது. இதில் எச்.எச். என்று சொல்லப்படும் பாம்பே நெகடிவ் ரத்தப் பிரிவு என்பது மிகவும் அரிதானது. 100 பேரில் சிலருக்கு மட்டுமே இருக்கும்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே கிராமத்தைச் சேர்ந்த பெண் மைதிலி(வயது21)(பெயர்மாற்றப்பட்டுள்ளது). நிறைமாத கர்பிணியான மைதிலிக்கு கடந்த சனிக்கிழமை வலி ஏற்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் மருத்துவமனையில் 2-வது பிரசவத்துக்காக அனுமதிக்கபட்டார்.

அப்போது, மருத்துவர்கள் மைதிலிக்கு மிகவும் அரிதான எச்.எச். பிரிவு ரத்தம் இருப்பதை கண்டறிந்தனர். இந்த “பாம்பே நெகடிவ்” ரத்தப்பிரிவு உள்ளவர் பட்டியலை எடுத்து தயார் செய்தனர். மேலும், ஊடகத்தினர் சிலருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆங்கில நாளேட்டில் பணியாற்றும் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் கிடைத்த செய்தியை அறிந்து பெங்களூருவில் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ஆதித்யா ஹெக்டே ரத்தம் கொடுக்க முன்வந்தார்.

ரத்தம் கொடுப்பதற்காக திங்கள்கிழமை இரவு ரெயில் மூலம் ஆதித்யா ஹெக்டே சென்னை வந்தார்.  ரத்தம் கொடுத்து சென்னை பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ஹெக்டே, மீண்டும் ரெயில் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து எழும்பூர் தாய்,சேய் நல மருத்துவமனையின் ரத்த வங்கி அதிகாரியும், மருத்துவரான ஜெயந்தி கூறுகையில், “ வழக்கமாக ஏ.பி. ஏபி, ஓ ஆகிய ரத்தப்பிரிவுகளில் இருப்பது இயல்பானது. ஆனால், எச்.எச். என்ற ரத்தப்பிரிவு என்பது மிகவும் அரிதானது. இதுவரை இந்த மருத்துவமனை சார்பில் 10 எச்.எச். ரத்தப்பிரிவு உள்ளவர்களை கண்டறிந்து குறித்து வைத்து இருந்தோம். ஆனால், அவர்கள் எல்லாம் எச்.எச். பாசிடிவ் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், மைதிலிக்கோ நெகடிவ் பிரிவு ரத்தம். இதையடுத்து பல்வேறு தரப்பினரின் உதவியை நாடினோம். கடந்த சில ஆண்டுகளில் எச்.எச்.நெகடிவ் ரத்தம் கொண்டிருக்கும்  முதல் கர்பிணி மைதிலிதான்” என்று தெரிவித்தார்.

எழும்பூர் மருத்துவமனையின் மருத்துவர் சாந்தி குணசிங் கூறுகையில், “ மைதிலி இதற்கு முன் மருத்துவப்பரிசோதனைக்கு வரும்போது நலமாகவே இருந்தார். ஆனால், அவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்து, மிகவும் அரிதான ரத்தப்பிரிவைக் கொண்டு இருக்கிறீர்கள். ஆதலால், பிரசவதேதிக்கு 15 நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்தான் ரத்தப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்று கூறி இருந்தோம்.

ஆனால், அதை மைதிலி செய்யவில்லை. மேலும் முன்எச்சரிக்கையாக, மைதிலியின் உடலில் இருந்து ரத்தத்தை சில யூனிட்கள் எடுத்துஅதை பாதுகாத்து வைத்து இருந்தோம். திடீரென கிடைக்காவிட்டால், அதை பயன்படுத்த முடிவு செய்து இருந்தோம். பிரசவ நேரத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியால் பெங்களூரைச் சேர்ந்த ஆத்தியா ஹெக்டே இதை அறிந்து ரத்தம் கொடுத்து மைதிலி உயிரைக் காத்தார்” என்றார்.

சென்னை பெண்ணுக்கு உயிர் கொடுத்த ஆதித்யா ஹெக்டே கூறுகையில், “ என்னுடைய உடம்பில் இருப்பது மிகவும் அரிதான எச்.எச். வகை ரத்தம் என்பது தெரியும். சென்னையில் உள்ள ஒரு பெண்ணுக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்பதை அறிந்தவுடன், அவருக்கு உதவி செய்ய திங்கள்கிழமை நண்பகலுக்கு பின் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து, ரெயிலில் சென்னை வந்தேன்.

மருத்துவமனை நிர்வாகத்துக்கு நான் கூரியரில் ரத்தம் அனுப்பிவைக்கிறேன் எனக் கூறியபோது, அவர்கள் நேரடியாக வந்தால் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆதலால், நேரடியாக வந்து ரத்தம் கொடுத்தேன். இதுவரை 55 முறை ரத்த தானம் வழங்கி இருக்கிறேன். இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ரத்தத்தை கூரியர் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைத்து இ ருக்கிறேன்” என்றார்.

மைதிலியின் மாமா ராமு கூறுகையில், “ எங்கள் மைதிலியை காப்பாற்ற கடவுள் தான் ஹெக்டேவை அனுப்பி வைத்துள்ளார். அவரின் உதவிக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்பது தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை அவர் கடவுள். இப்போது மைதிலும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்” என்றார்.