Bengaluru Corp Company help to Rajini for his political entry

உடலளவில் ரஜினி மும்பையில் இருந்தாலும் அவரது கவனம் முழுக்க தமிழகத்தில்தான் இருக்கிறது. அரசியல் பிரவேசம் தொடர்பாக தான் பற்ற வைத்துவிட்டு வந்த பட்டாசு எந்தளவுக்கு அதிர்வை கிளப்பி வருகிறது என்பதை நொடிக்கு நொடி கவனிக்கிறார். அதுவும் சாதாரணமாக இல்லை அரசியல் அப்டேஷனுக்காக ஒரு டீமே இயங்கிக் கொண்டிருக்கிறது!

எப்படியாம்?...

ரஜினியின் அரசியல் பிரவேச பரபரப்புகள் குறித்து பத்திரிக்கை மற்றும் மீடியாக்களில் வரும் பரபரப்பு செய்திகள், விஷூவல் மீடியாவில் வரும் விவாதங்கள், அரசியல் தலைவர்களின் ரியாக்‌ஷன்கள், இணையதள பத்திரிக்கைகளின் விமர்சன கட்டுரைகள், இளைஞர்களின் வாட்ஸ் அப் பரிமாறல்கள், மீம்ஸ் என ஒன்றுவிடாமல் ஒவ்வொன்றையும் கவனித்து ஃபைல் செய்வதற்காக தனி கார்ப்பரேட் டீம் ஒன்று ரஜினி சார்பாக பணிக்கப்பட்டுள்ளது.

விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் இருவர், கடந்த தேர்தலின் போது சர்வே ஏஜென்ஸிகளில் பணியாற்றிய பெண்கள், ஒரு சில போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் என சுற்றிச்சுழல்கிறது அந்த டீம். அவர்களை இயக்க இரண்டு டீம் ஹெட்ஸ் என பக்காவான பவர் பேக்டு க்ரூ அது. 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சிக்கப்படும் என ஸ்மெல் செய்யப்படும் சென்னையின் எந்த நிகழ்ச்சிக்கும் இவர்கள் கேமெராவோடு ஆஜராகிறார்கள். வழக்கமான கேமெராமென் இல்லாமல் புதிய முகங்கள் யாராவது தென்பட்டால் அவர்கள் ரஜினியின் க்ரூவை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. 

’அரசியலில் ரஜினி’ என்ற கான்செப்டுக்கு கிடைக்கும் வரவேற்பு ரியாக்‌ஷன்களை விட எதிர்ப்பு ரியாக்‌ஷன்களைத்தான் மிக முக்கியமாக பதிவு செய்கிறது இந்த டீம். யார் எதிர்க்கிறார்கள்? ஏன் எதிர்க்கிறார்கள்? எதிர்ப்பவரின் அரசியல் மற்றும் பொது வாழ்வியல் பின்னணி என்ன? என்பனவற்றை மிக துல்லியமாக ஆராய்ந்து தனித்தனி ஃபோல்டர்களை உருவாக்குகிறார்கள். இவற்றை அப்படியே ரஜினியின் பிரத்யேக மெயிலுக்கு அப்லோடு செய்கிறார்கள். ரஜினி அவற்றை ஒன் பை ஒன்னாக ஓப்பன் செய்து பார்க்க வேண்டியதில்லை. காரணம், ரஜினிக்கு மட்டுமில்லாமல் மும்பையை சேர்ந்த ஏஜென்ஸிக்கும் இந்த தகவல் வந்து விழுகிறது.

அந்த செய்திகள், போட்டோக்கள் வீடியோக்களை கிட்டத்தட்ட ஆன்லைன் மேகஸின் போல வடிவமைத்தே ரஜினியிடம் வழங்குகிறது மும்பையிலுள்ள ஏஜென்ஸியின் டீம் ஒன்று. அதை தினந்தோறுமோ அல்லது தினமும் சில முறையோ ஓப்பன் செய்து பார்க்கும் ரஜினி, அரசியலுக்கு வருவது தொடர்பான தனது மூவ்களுக்கான ரியாக்‌ஷன்களை மியூஸிக் பின்னணியுடன், வேல்யூ அடட் (value added) வடிவத்தில் பார்க்கிறார். அது அவருக்கு ஒருவித உத்வேகத்தை தருகிறது. வீடியோவுடன் கூடிய நெகடீவ் ரியாக்‌ஷன்கள் அவருக்கு கூடுதல் அழுத்தத்தை தந்து யோசிக்கவும் வைக்கிறது. 

ரஜினியின் கேமெரா கண்களுக்கு அவரது ரசிகர்களும் தப்பவில்லை. அவர்களின் பேச்சும், செயலும் மிக உன்னிப்பாக ஆவணமாக்கப்பட்டு உடனுக்குடன் ரஜினிக்கு செல்கிறது. அவரும் அதற்கு ரியாக்ட் செய்கிறார். இதற்கு சரியான உதாரணம்தான், ’தலைமையின் அனுமதியில்லாமல் ரசிகர்கள் ரஜினியை பற்றி பேட்டியெல்லாம் பத்திரிக்கைகளுக்கோ, மீடியாக்களுக்கோ கொடுக்க கூடாது.’ என்று சுதாகர் போட்ட உத்தரவு. மும்பை போன பிறகும் தமிழ்நாட்டை கவனிப்பேன், ரியாக்ட் செய்வேன், உத்தரவிடுவேன் என்பதால்தான் ரசிகர் மன்றம் குறித்து முழு அதிகாரத்தையும் சுதாகருக்கு வழங்கி அதை முறைப்படி அறிக்கையாகவும் வெளியிட்டுச் சென்றார் ரஜினி. 

ஆக காலாவில் ஒரு கால், அரசியல் கோதாவில் ஒரு கால் என்று ரெட்டைக்குதிரை சவாரி செய்து கொண்டிருக்கிறார். 

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய ரியாக்‌ஷன்களை பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் இன்னொரு காரியத்தையும் இந்த டீம் செய்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதாவது ரஜினி மும்பை கிளம்பும் முன் தமிழகத்தை சேர்ந்த விஷூவல் மீடியா எடிட்டர்கள், அரசியல் விமர்சகர்கள், சில அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை அழைத்து மாநில மற்றும் தேசிய அரசியல் விஷயங்களைக் கேட்டறிந்தார். அதில் தமிழருவி மணியனும் ஒருவர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அவர் ரஜினியுடன் பேசியிருந்தார். 
இந்நிலையில் நேரமின்மையால் ரஜினியால் சந்திக்க முடியாத மீடியா, பத்திரிக்கை மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலர் அவரது லிஸ்டில் இருக்கின்றனர். அவர்களில் சிலரிடம் ரஜினி கேட்க வேண்டிய கேள்விகளை கொடுத்து அவர்களை பேசச்சொல்லி வீடியோ பேட்டி எடுத்திருக்கிறது ரஜினிக்காக சுழலும் டீம். அதில் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று முழங்கும் நபரும் ஒருவர். 

ரஜினி நேரில் இல்லை என்பதால் முகஸ்துதி பார்க்காமல் சிலர் ‘நீங்க வரவேண்டாம் பிரதர், இந்த ஃபீல்டு இவ்வளவு வயசுக்கும் மேலே உங்களுக்கு சரிப்பட்டு வருமான்னு யோசிங்க, சினிமா தோல்விக்கே இமயமலை போறவர் நீங்க தேர்தல் தோல்வியை தாங்கிக்க முடியுமா?’ என்று உடைத்துப் பேசிவிட்டனராம். 

மேற்படி கலகக்காரரோ ரஜினி ஏன் வரவேண்டாம் என்பது பற்றி விரிவாக பேசிவிட்டு ஒரு படி மேலேப்போய் ‘தயவு செய்து தமிழருவி மணியனையெல்லாம் ஒரு அளவுகோலாக வைத்து அவர் சொல்லும் வார்த்தைகளை கேட்டு மயங்கி அரசியலுக்கு வந்துடாதீங்க. உணர்வு எனும் ஆயுதத்தை வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு துரோகமிழைப்போரில் அவரும் முக்கியமானவர். 

கருணாநிதியை கருவிவிட்டு ஜெயலலிதாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார், வைகோவை முதல்வராக்குவேன் என்றார், பின் வாசனே என் தலைவர் என்றார் நடுவில் சில காலம் தூங்கி எழுந்துவிட்டு இப்போது உங்களை பிடித்துக் கொண்டிருக்கிறார். ‘ரஜினி நிச்சயம் தனிக்கட்சி தொடங்குவார்.’ என்று தன்னிச்சையாக அவர் அறிவிப்பதெல்லாம் உங்களைப் பிடிக்கும் சாபங்கள். அவரிடம் கவனமாக இருங்கள்.” என்று தூர்வாரி எடுத்துவிட்டாராம் தமிழருவியை. 

இதையெல்லாம் பிளே செய்து பார்த்த ரஜினியை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது என்கிறார்கள். 

ரஜினியின் அண்ணன், தமிழருவி, திருநாவுக்கரசர் என்று ஆளாளுக்கு ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தாலும் கூட ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது ஒரேயொருவருக்கு மட்டும்தான் தெரியும். 

அது, ரஜினியின் உடல் நிலையை தொடர்ந்து கவனிக்கும் மருத்துவ குழுவின் சீஃப் டாக்டர்தான். ரஜினிக்கு இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டுவிட்டால் அது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் லதாவை விட துல்லியமாக இருக்கிறார் அந்த டாக்டர். 
அவரை மீறியா ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார்?!