மேற்கு வங்க ஆட்சி மீது கை வைப்பீங்க.? வங்கம் வந்தால் வங்கப் புலிகள் உங்களை வேட்டையாடும்.! மம்தா எச்சரிக்கை!
மேற்கு வங்காளத்துக்கு நீங்கள் வருவதற்கு முதலில் வங்காள விரிகுடாவை கடக்க வேண்டும். அங்கு முதலைகள் உங்களைக் கடிக்கும் என்று பாஜகவினருக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை கல்வியமைச்சராக இருந்த தற்போதைய தொழில் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நிரப்ப ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து இந்த வழக்கில் புகாருக்கு ஆளாகியுள்ள பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. அப்போது நடந்த சோதனையில் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி என்பருடைய வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக பார்த்தா சாட்டர்ஜியிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: sonia gandhi ed: சோனியா காந்தியிடம் 2-வது முறையாக அமலாக்கப் பிரிவு இன்று விசாரணை: டெல்லியில் 144 தடை உத்தரவு
ஆனால், அவர் அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆலுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பார்த்தா சாட்டர்ஜி கைதானவுடன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் பார்த்தா சாட்டர்ஜி அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விவகாரத்தால் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதையும் படிங்க: குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்… அமைச்சர் கைது விவகாரத்தில் மம்தா கருத்து!!
அப்போது அவர் கூறுகையில், “ஒன்றிய அரசு நடத்தும் மருத்துவமனையில் பார்த்தாவை அனுமதித்திருப்பதன் உள்நோக்கம் என்ன? மத்திய அரசு அப்பாவி என்றும் மாநில அரசுகள் திருடர்கள் என்றும் நினைக்கிறீர்களா? இந்த முறை மகாராஷ்டிராவால் உங்களை எதிர்த்து சண்டையிட முடியவில்லை. ஆனால், மகாராஷ்டிராவை தொடர்ந்து சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் என்று பாஜகவினர் பேசி வருகிறார்கள். முதலில் இங்கு நீங்கள் வருவதற்கு வங்காள விரிகுடாவை கடக்க வேண்டும். அங்கு முதலைகள் உங்களைக் கடிக்கும். அடுத்து சந்தரவன காடுகளில் வங்கப் புலிகள் உங்களை வேட்டையாடும். வடக்கு வங்காளத்தில் யானைகள் உங்களை ஏறி மிதிக்கும்” என்று மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களவையில் அமளி… ஜோதிமணி உள்பட 4 பேர் சஸ்பெண்ட்… அவைத் தலைவர் அதிரடி!!