டெல்லி கலவரத்துக்குக் காரணமான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ள பாஜகவில் இனியும் நான் இருக்க மாட்டேன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை சுபத்ரா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிஏஏ ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் டெல்லியில் கலவரமாக வெடித்தது. இதுவரை இந்த சம்பவத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவத்துக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்றோரே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ள கட்சியில்  நான் இருக்க மாட்டேன் எனப் பேசி மேற்கு வங்களாத்த்தைச் சேர்ந்த நடிகை பாஜ.கவிலிருந்து விலகியுள்ளார். 


இதுதொடர்பாக சுபத்ரா முகர்ஜி என்ற அந்த நடிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நினைத்துபோல் பாஜக அதன் பாதையில் செல்லவில்லை. மதத்தால் மக்களைப் பிரித்து வெறுப்புணர்வை விதைக்கும் வேலையை அக்கட்சி செய்கிறது. அதுவே பாஜகவின் சித்தாந்தமாக மாறியிருப்பதாக உணர்கிறேன். டெல்லியில் ஏராளமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலருடைய வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. கலவரம் மூலம் மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள்.
அதற்கு பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்றோரின் வெறுப்பு பேச்சுக்களே காரணம். அவர்கள் மீது பாஜக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அப்படியானால் பாஜகவில் என்ன நடக்கிறது? டெல்லி கலவரம் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. வெறுப்பு பேச்சுகளால் ஆதாயம் தேடியவர்கள் மீது நடவடிக்கையே எடுக்காத கட்சியில் இனியும் நான் இருக்க மாட்டேன். அவர்கள் இருக்கும் கட்சியில் இருக்கக் கூடாது என முடிவெடுத்து, ராஜினாமா செய்ய உள்ளேன்” எனத சுபத்ரா முகர்ஜி தெரிவித்தார்.