தமிழகத்தில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் முதல் ஆளாக சென்று குரல் கொடுக்கும் கவுதமன் திடீரென அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான பின்னணி தெரியவந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய போது போலீசாரால் தாக்கப்பட்டவர் கவுதமன். அன்று முதல் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கவுதமன் பிரபலம் ஆனார். பின்னர் ஒரு முறை சென்னை கத்திப்பாரா பாலத்திற்கு குறுக்கே இரும்பு சங்கிலியை கட்டி மறியலில் ஈடுபட்டு கைதானார் கவுதமன். அதன் பிறகு தமிழகத்தில் தமிழர் உரிமைக்கான போராட்டங்களில் ஆர்வத்துடன் இவர் பங்கெடுத்து வருகிறார்.
படித்து முடித்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட மாணவர்களுக்கான இயக்கம் என்று கூறி சில இளைஞர்களை எப்போதும் உடன் அழைத்துக் கொண்டு ஆங்காங்கே போராட்டம் நடத்துவது கவுதமனின் வழக்கம். இதனால் தமிழகத்தின் பல ஊர்களில் கவுதமன் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட சென்னையில் வைத்து கவுதமன் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து கைது செய்யப்படுவதால் போராட்டம் நடத்துவதில் இருந்து ஒதுங்கியிருந்த கவுதமனுக்கு திடீரென அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததே நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து தான் என்கிறார்கள். சீமானும் கூட கவுதமனைபோல் சினிமாவில் இயக்குனராக இருந்து தமிழர் உரிமை என்று பேசித்தான் அரசியல் இயக்கம் கண்டார். அரசியல் இயக்கம் காணுவதற்கு முன்னர் சீமானையும் கூட போலீசார் பல்வேறு வழக்குகளில் கைது செய்தனர்.
ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கைது நடவடிக்கை குறைந்தது. இதனையே பின்பற்றி நாமும் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டால் போலீசாரின் கெடுபிடி குறையும் என்று கவுதமன் கருதுகிறார். மேலும் இயக்கமாக இருப்பதை விட அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டால் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பதாக கூறி வசூல் வேட்டையிலும் ஈடுபடலாம் என்று கவுதமனிடம் யாரோ யோசனை கூறியுள்ளனர்.

மேலும் ரஜினியை எதிர்த்து சீமானை போல் அவ்வப்போது கடுமையாக பேசினால் போதும் ஊடக வெளிச்சமும் தாராளமாக கிடைக்கும் என்று கவுதமனிடம் கூறியுள்ளனர். இதனையே வேதவாக்காக கொண்டு அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கவுதமன் அறிவித்துள்ளார். மேலும் அறிவிப்பை வெளியிட்ட உடனேயே ரஜினி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிட உள்ளதாக கவுதமன் கூறியது ஊடகங்களில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றது.
தான் எதிர்பார்ப்பது நடப்பதாக கருதி தற்போது கட்சிக்கான பணிகளை கவுதமன் வெகு ஜோராக தொடங்கி செயல்படுத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையன்று கட்சிப் பெயர் மற்றும் கொடியை அறிவித்து ரஜினிக்கு எதிரான பிரச்சாரத்தையும் தொடங்க கவுதமன் முடிவு செய்துள்ளாராம்.
