ஒரு செங்கோட்டையன் பேசுவதற்கு முன் வந்திருக்கிறார். எங்களுக்கு தெரிந்த அதிமுகவில் ஆறெழு செங்கோட்டையன்கள் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள் பேச முன்வரவில்லை.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில் வரும் 5ம் தேதி மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார் செங்கோட்டையன். அவர் எப்படிப்பட்ட அணுகுண்டை வீசப்போகிறார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் செங்கோட்டையன் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் விசாரித்தோம். ‘‘எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி பேச முதன்முறையாக டெல்லி சென்றதை சட்டசபையில் மு.க.ஸ்டாலின் சொல்லித்தான் தெரியும். இது என்ன கட்சியா? இதுதான் எடப்பாடி நடந்து கொள்ளும் முறையா? இதுதான் ஒரு கட்சியினுடைய தலைவர் நடந்து கொள்ளும் முறையா? சட்டசபையில் எழுந்து முதலமைச்சர் சொல்கிறார் ‘‘எதிர்க்கட்சித் தலைவர் இன்று காலை டெல்லி சென்று இருக்கிறார். அங்கு சென்று தமிழக பிரச்சினைகளை எழுப்புவார் என எதிர்பார்க்கிறேன்’’ என்று சொன்னவுடன் அதிமுகவினரே திகைத்து நிற்கிறார்கள்.

சட்டசபைக்குள் பொதுச் அதிமுக பொதுச்செயலாளர் டெல்லி சென்றதை தெரியாமலே சட்டசபையில் உட்கார்ந்து இருக்கிறார்கள் அதிமுக எம்எல்ஏக்கள். எடப்பாடி பழனிச்சாமி எங்கே சென்றார் என்பதே சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒருத்தருக்கும் தெரியாது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கக்கூடிய ஆர்.பி.உதயகுமார், கொராடா என யாருக்கும் தெரியாது. டெல்லி சென்று நான் கட்சியின் கட்டிடத்தை பார்க்க வந்தேன் என கதை விடுகிறார். அதன் பிறகு அமித் ஷாவை சந்திக்கிறார். அங்கிருந்து திரும்பிய பிறகும் கூட்டணி பற்றி பேசவில்லை என்று பொய் சொல்கிறார்.
இது போன்ற எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளைத்தான் எதிர்க்கிறார் செங்கோட்டையன். தான் ஒதுக்கப்படுவது ஏன் என்பதற்கான காரணத்தையாவது செங்கோட்டையன் வரும் 5ம்தேதி கேட்பார். தான் ஒதுக்கப்படுகிறேன் என்பதையாவது அவர் வெளிப்படுத்துவார். கட்சி ஒழுங்காக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை எந்த வகையில் சொல்லப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு தான் அதிமுகவினர் காத்திருக்கின்றனர். கட்சி சரியான திசையில் பயணிக்கவில்லை என்பது செங்கோட்டையனின் குற்றச்சாட்டு.

ஒரு செங்கோட்டையன் பேசுவதற்கு முன் வந்திருக்கிறார். எங்களுக்கு தெரிந்த அதிமுகவில் ஆறெழு செங்கோட்டையன்கள் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள் பேச முன்வரவில்லை. எடப்பாடியின் முதுகுக்கு பின்னால் ஏழு, எட்டு செங்கோட்டையன்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக போகிற பாதை சரியாக இல்லை. இந்த வண்டி இப்படி போய்க் கொண்டிருந்தால் இது போய் சேர வேண்டிய இடத்தை சேராது என்பதை செங்கோட்டையன் வரும் 5ம் தேதி பேசுவார்’’ என்கிறார் அவர்.
