இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11 பேர் தமிழகத்தில் பலியாகி இருக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தீவிரத்தை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு தமிழகத்திலும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தனிமை சிகிச்சையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினர், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் சுகாதார துறை மூலமாக அரசு கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தமிழகத்தில் சமூக பரவலாக மாறுவதை தடுக்க ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தீவிரமாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார். கொரோனா தொடர்பான தகவல்களை மக்களுக்கு அளித்து அரசின் நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தி வருகிறார்.

 

இதனிடையே காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனே மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என பீலா ராஜேஷ் மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், ’காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கைக்குட்டையை முகக்கவசமாய் பயன்படுத்திக் கொண்டு செல்லுங்கள். மேலும் தயவு செய்து வீட்டில் இருந்துகொண்டே சுயமருத்துவம் செய்யாதீர்கள், தொலைபேசியில் மருத்துவர்களை தொடர்புகொண்டுகூட அறிவுரை கேட்கலாம்’ என பதிவிட்டிருக்கிறார்.