பிசிசிஐ முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான அனுராக் தாகூர், மக்களவை பாஜக தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிசிசிஐ தலைவராக இருந்தபோது பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி உச்சநீதிமன்றத்தால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இமாச்சலப்பிரதேசம் ஹிமாபுர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர்  அனுராக் தாகூர். இவர்  பாஜகவின் இளைஞரணி தலைவராக இருந்து வந்தார்.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த  அனுராக் தாகூர் உச்சநீதிமன்றத்தின் அதிரடியால் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்நிலையில், நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பாஜகவின் தலைமை கொறடாவாக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமை கொறடாவாக இருந்த ராகேஷ் சிங் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் பதவியில் இருந்து விலகினார். 

ஒரு கட்சியின் கொறடாவின் உத்தரவுக்கு ஏற்ப அக்கட்சி எம்பிக்கள் அவையில் செயல்பட முடியும். கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.