சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் பின்னணியே அமைச்சரவை மாற்றம் செய்ய முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

ஆர்.கே.நகர் படுதோல்வி, மக்களவை தேர்தல் அவமானம், வேலூரில் வெற்றி வாய்ப்பை இழந்தது போன்ற காரணங்கள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸின் தலைமை மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி அவர்கள் இருவருக்கும் மட்டும் அல்லாமல் அதிமுக எனும் கட்சிக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் வெற்றி என்பது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு கிடைத்தது போன்ற எளிதான வெற்றியை சட்டமன்ற தேர்தலில் கொடுத்துவிடாது என்பதை கூறும் வகையில் இருக்கிறது. மேலும் அதிமுகவில் எடப்பாடி தரப்புக்கான பிடியை மேலும் அதிகரித்துள்ளது. ஆர்.கே.நகரில் கிடைக்காத வெற்றி, வேலூரில் கிடைக்காத வெற்றி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் சாத்தியமானது எப்படி என்கிற கேள்விக்கு எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு தான் காரணம் என்கிறார்கள் அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள். உடுமலை ராதாகிருஷ்ணனுடன் மோதிய அமைச்சர் மணிகண்டனை பதவியை விட்டு தூக்கி அடித்தார் எடப்பாடி. முதலமைச்சராக அவர் பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் பதவி நீக்கமாகும்.

இந்நிலையில், சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போதும், அவர்களை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை, தங்கள் வசம் வைத்துள்ளனர். இதனால், அதிமுக எம்எல்ஏக்கள் பலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பார். மேலும் தவறு செய்யும் அமைச்சர்களை, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அமைச்சர்களை மாற்றியிருப்பார். நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இதனால், சில அமைச்சர்களிடம் பொறுப்பை மாற்றிகொடுத்துவிட்டு அமைச்சரவையில் புதியவர்களை சேர்க்கவோ முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அமைச்சரையில் மாற்றம் செய்வதற்கான சந்திப்பு என்றே கூறப்படுகிறது.