சென்னை குரோம்பேட்டைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 ). கடந்த வெள்ளிக்கிழமை இவர் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அதிமுக சார்பாக அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் மற்றும் அரசின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படுவதோடு மட்டுமில்லாது காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவும் செய்து வருகிறது.

இந்தநிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்ற கூட்டத்திற்கு பிரம்மாண்ட வளைவுகளும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இருக்கும் கோட்டகம் பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா  பங்கேற்றார்.

அவரை வரவேற்கும் முறையில் அந்த பகுதியைச் பாஜக தொண்டர்கள் சார்பாக வழிநெடுகிலும் அனுமதியின்றி பேனர்களும் பிரம்மாண்ட வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் பேனர்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் பாஜகவினரின் இந்த செயலைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முறையான அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அந்த பகுதி மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.