banned for dinakaran

சசிகலா குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களில் 2-வது நாளாக ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், டெல்லி செல்ல விமான நிலையம் வந்த டிடிவி தினகரனை ஐடி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். எங்களது நடவடிக்கை முடிந்த பிறகே, உங்களால் வெளியூர் செல்ல முடியும் என்றும் அதுவரை சென்னையில்தான் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான, சென்னை, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை என பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு நேற்று காலை முதல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை முடித்துக் கொண்டதாகவும், மீதமுள்ள 147 இடங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமான வங்கி லாக்கர்கள் இன்று திறக்கப்பட்டன. இவற்றில் சொத்து ஆவணங்கள், தங்கம், வெள்ளி பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனை நடந்து கொண்டிருந்தபோது டிடிவி தினகரன் டெல்லிக்கு செல்ல முயன்றார். விமான நிலையத்திலேயே அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

வருமான வரித்துறை வரலாற்றில் இவ்வளவு பெரிய சோதனை நடைபெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 1800 அதிகாரிகள் ஒரே நேரத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி, சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் இந்த சோதனைகளை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

நேற்றிரவுடன் முதல் நாள் சோதனை முடிவடைந்தது. இன்று காலை 2-வது நாள் சோதனை தொடங்கியது. காலை 7 மணியிலிருந்து தஞ்சையில் மட்டும் 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.சசிகலாவின் உறவினர்கள் மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ், சசிகலாவின் வக்கீல் செந்தில், ஜோதிடர் சந்திரசேகர் ஆகியோரது இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகம், ஈக்காட்டுத் தாங்கலில் தற்போதுள்ள ஜெயா டிவி அலுவலகம், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமா தியேட்டர் ஆகியவற்றில் சோதனை நடைபெற்று வருகிறது.இன்றுடன் 41 இடங்களில் சோதனை நடைபெறும் நிறைவடையும் என்றும் எஞ்சிய இடங்களில் திங்கட்கிழமை வரை இந்த சோதனை நீடிக்கும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது டிடிவி தினகரன் இன்று காலை விமானம் மூலம் டெல்லி செல்ல முயன்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாருடன் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர். எங்களது நடவடிக்கைகள் முடிந்த பிறகே உங்களால் வெளியூர் செல்ல முடியும் என்றும், அதுவரை சென்னையில்தான் இருக்க வேண்டும் என்று கூறி அவருக்கு தடை விதித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் தடை விதித்ததை அடுத்து டிடிவி தினகரன், விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.