கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று பிற்பகல் திடீரென கேட்ட பயங்கர வெடி சத்தத்தால் ஒட்டுமொத்த பெங்களூர் மாநகரமும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது .  இதனால் வீடுகளில் இருந்த மக்கள் பதற்றத்தில் அலறியடித்து சாலைகளுக்கு ஓடிவந்தனர் .  இதுவரை இந்த சத்தம் எங்கிருந்து வந்தது ,  எதனால் இப்படி ஒரு சத்தம் ஏற்பட்டது என்பது குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை, இதனால் பெங்களூரு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  இதுகுறித்து  விசாரித்து வருவதாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார் .  கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி  வரும்  நிலையில் ,  பெங்களூரு உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது . இதனால்  மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில்,  இன்று பிற்பகல் 1 :45 மணி அளவில் பயங்கர வெடிச் சத்தம் ஒன்று கேட்டது .  அந்த பயங்கர சத்தத்தால் வீடுகளில் ஜன்னல் மற்றும் கதவுகள் அதிர்ந்தன .  திடீரென ஏற்பட்ட இந்த சத்தத்தால் பதற்றமடைந்த மக்கள் வீடுகளை விட்டு தலைதெறிக்க சாலைகளுக்கு ஓடினர் . 

ஒருவரை மாற்றி ஒருவர் என்ன நடந்தது  என விசாரிக்க ,  இதனால் அந்த சத்தம்  எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஒருவருக்குமே தெரியவில்லை .  பெங்களூருவில்  குக் டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஓசூர் சாலை, எச்ஏஎல், ஓல்ட் மெட்ராஸ் சாலை, உல்சூர், குண்டனஹள்ளி, கம்மனஹள்ளி, சி.வி.ராமன் நகர், வைட்ஃபீல்ட் மற்றும் எச்.எஸ்.ஆர் லே அவுட் வரை இந்த சத்தம் கேட்டது இதனால் அப்பகுதியில்  உள்ள மக்கள் மத்தியில் பதற்றம்  ஏற்பட்டது .  இந்த வெடிச்சத்தம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது ,  இதற்கிடையில் நகரத்தின் எந்தப் பகுதியிலும் எந்த சேதமும் , அல்லது அசம்பாவிதமும் ஏற்படவில்லை ஏதாவது விமான விபத்து ஏற்பட்டிருக்க கூடுமோ என பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கேட்டதற்கு , பெங்களூரு மாநகர காவல் ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார் . 

அதேபோல் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மையத்தின் விஞ்ஞானிகள் எதனால் இந்த சத்தம் ஏற்பட்டது என்பது குறித்து சோதித்து வருவதாக தெரிவித்தனர் .  அதேவேளையில் இந்த பயங்கர சத்தம் பூகம்பமும் அல்ல இது வேறுவிதமான ஒரு ஒலி என அவர்கள் தெரிவித்துள்ளனர் .  அதே நேரத்தில் இது குறித்து தெரிவித்துள்ள இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் விஞ்ஞான அதிகாரியான ஜெகதீஷ் ,  தற்போது  ஏற்பட்ட இந்த சப்தத்தால் எந்த நில அதிர்வும் அசைவுகளும் ஏற்படவில்லை ,  ஆனாலும் இப் பகுதிகளில் நில அதிர்வு அளவீடுகளை கண்காணித்து வருகிறோம் ,  அவைகளில் பூகம்பம் போன்ற  எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனவே இது ஒரு பூகம்பமாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதியாக கூற முடியும் என அவர் கூறியுள்ளார் .  இந்த சப்தத்திற்கு  வான்வெளி இயக்கம் மட்டுமே ஒரு காரணமாக இருக்க முடியும் .  ஆனால் அதையும்கூட அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் பெங்களூரு தெற்கு பகுதி போலீசார் இந்த சத்தம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .