ஆம்! 
தமிழக பா.ஜ.வின் தலைவராக இருந்த தமிழிசை வார்த்தை வீச்சில் பெரும் தீரத்துடன் தான் செயல்பட்டார். ஆனால் அக்கட்சியின் மற்ற நிர்வாகிகளின் ஒத்துழையாமையும், தமிழகத்தில் புரையோடி இருக்கும் பா.ஜ. எதிர்ப்பு நிலையும் அவரால் இங்கே தாமரையை மலர வைக்கவே  முடியவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற   தேர்தல் தோல்விக்குப் பின் சமீபத்தில் தமிழிசையை தெலுங்கானா கவர்னராக்கிவிட்டது பா.ஜ. மேலிடம். இதனால் தமிழக பா.ஜ. தலைவர் பதவியிடம் காலியாக இருக்கிறது. இந்தப் பதவியில் அமரப்போவது பொன்னாரா, வானதியா, சி.பி.ராதாகிருஷ்ணனா, கறுப்பு முருகானந்தமா, இளைஞரணி முருகானந்தமா? என்று ஒரு வாதம் போய்க் கொண்டிருந்தது. 

ஆனால் ‘இவர்கள் யாருமே இல்லை. இவர்களெல்லாம் ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள், இருந்தவர்கள். ஆனால் கட்சியின் வளர்ச்சிக்காக பெரிதாய் எந்த மேஜிக்கையும் செய்யாதவர்கள். தலைமைக்கு தேவை ஒரு மேஜிக்கை நிகழ்த்தும் மனிதர்தான். தமிழக தலைவராக நியமிக்கப்படும் மனிதர் பல லட்சம் வாக்குகளை பா.ஜ.வுக்கு இழுப்பவராகவும், மக்கள் நம்பிக்கை வைக்கும் மனிதராகவும் இருக்க வேண்டும். அப்படியொரு நபரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.’ என்று டெல்லி வட்டாரத்தில்  இருந்து சன்னமாக ஒரு சவுண்டு வந்தது. 

சொன்னது போலவே பா.ஜ. தலைமை தமிழகத்தில் தலைவராய் நியிமிக்க சில வலுவான நபர்களை தேடுவது புலனானது. ரஜினிகாந்தை எவ்வளவோ முயன்றும் ‘நான் கட்சி துவக்கிய பின் கூட்டணி வைக்கலாம். ஆனால் நான் பா.ஜ.வின் தலைவராவதை என் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். எந்த நன்மையும் விளையாது.’ என்று மறுத்தார். இந்த நிலையில் பா.ஜ.வுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஜக்கி வாசுதேவை அணுகினர். அவரோ ‘நேரடி அரசியல் எனக்கு சரியாக வராது, என் நோக்கமும் அது அல்ல. ஆனால் ஆளும் அதிகாரத்தில் உள்ள நபர்களோடு இணைந்து தேச வளர்ச்சிக்காக, தமிழக வளர்ச்சிக்காக நல்ல காரியங்களை செய்திட நான் தயாராக இருக்கிறேன்.’ என்று சொல்லி விலகி நின்றார். 

அடுத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரை அணுகிப்பார்த்தார்களாம். தமிழகத்தில் பலப்பல லட்சம் பெண் மற்றும் ஆண் பக்தர்களை தன் பீடத்தின்  மீது நம்பிக்கையும், பற்றும் கொள்ள வைத்திருக்கும் நபரல்லவா இவர். அதனால்தான். ஆனால் அவரோ ஜக்கிவாசுதேவ் போலவே நேரடி அரசியலை தவிர்த்து, ‘மக்கள் மேம்பாட்டுக்காக உங்களோடு இணைந்து ஏதாவது பிராஜெக்ட் செய்ய தயார். ஆனால் அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.’ என்றாராம். எனவே அவரது மகன் அன்பழகனை இழுக்கலாம் என்று நினைக்கிறார்களாம். தலைவர் பதவி இல்லை, ஆனால் மருத்துவர் பீட பக்தர்களின் வாக்கு வங்கியை பெறுவதற்காக இவருக்கு ஏதாவது ஒரு முக்கிய பதவி வழங்கலாம் என பா.ஜ. தலைமை நினைக்கிறதாம். இப்படியாக பங்காரு அடிகளார், ஜக்கி, ரஜினி என தாங்கள் குறிவைக்கும் வலிமை மிகு, மக்களை ஈர்க்கும் ஆற்றல் மிகு ஆளுமைகள் எஸ்கேப் ஆகிக் கொண்டே செல்வதால் பெரும் வருத்தத்தில் இருக்கிறதாம் பா.ஜ. தலைமை.

குழப்பமும், எரிச்சலும் ஒரு சேர அழுத்துகிறதாம் மேல் வட்டாரத்தை. இந்த சம்பவங்களை கவனிக்கும் தமிழகத்திலுள்ள பா.ஜ.வின் எதிர்கட்சிகளோ “சொந்த கட்சியில் உருப்படியான ஒரு நபர் கூட இல்லைங்கிறதை பா.ஜ.வின் இந்த அலச்சல் உணர்த்துகிறது. ஆளே கிடைக்காவிட்டால் ஏதாச்சும் அரசமரத்தடியில் உட்கார்ந்திருக்கிற ஆண்டி தோண்டியை பா.ஜ.வின் தலைவராக்கிடுவாங்க போல.” என்று கிண்டல் பண்ணி கவுத்துகிறார்கள். 
பங்கம்!