தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். குறிப்பாக, மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு எதிராக, நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் ஸ்டாலின் வெளியிட்ட சில தகவல்கள் மற்றும் காற்றாலை மின்சாரம் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் போன்றவற்றால் அரசுத்தரப்பு ஆட்டம் கண்டுள்ளது. அரசுத் துறைகளில் நடைபெறும் விஷயங்கள் எப்படி ஸ்டாலினுக்குக் கசிந்தது என்ற குழப்பத்தில் அமைச்சர்கள் இருந்து வந்தனர்.

இதேபோல் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள பொதுப்பணித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்..

மின்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, அந்தத்துறையின் உயர் அதிகாரி ஒருவரே ஸ்டாலினுக்குத் தகவல்களை 'பாஸ்' செய்திருப்பதை சமீபத்தில் கண்டறிந்து, அந்த அதிகாரியை வேறு இடத்துக்கு மாற்றினார் தங்கமணி.

ஆனாலும், தொடர்ந்து ஆளும்தரப்பு மீது ஸ்டாலின் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பே காரணம் என நினைக்கிறது தமிழக அரசு. இதையடுத்து தி.மு.க-வுக்கு உளவு சொல்லும் ரகசிய ஒற்றர்களை  கண்காணித்து, அத்தகைய அதிகாரிகளைக் களையெடுக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் குழு , இதற்கான வேலையில் இறங்கியுள்ளது.. துறைவாரியாக தி.மு.க-வுக்கு அபிமானிகளாக யார், யார் உள்ளனர் என்ற தகவல்களை மேலிடத்துக்குச் இந்தக்குழு சொல்லி வருகிறது.. இதனால், கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன. கண்காணிப்பில் சிக்கும் அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வேலையில் அரசுத்தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.  எவ்வளவு ஸ்ரிக்ட்டாக இருந்தாலும் அரசு ரகசியங்கள் அம்பலமாகி வருவது எடப்பாடி அரசுக்கு குடைச்சலைக் கொடுத்து வருகிறது,