Asianet News TamilAsianet News Tamil

இந்தமாதிரி விஷக்கிருமிகளுக்கு தமிழக மக்கள் இரையாகக் கூடாது... அன்புமணியை கிழித்து தொங்கவிடும் பாலகிருஷ்ணன்

அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டி அரசியல் லாபம் தேட முற்படும் இதுபோன்ற விஷமிகளின் செயல்களுக்கு தமிழக மக்கள் இரையாகக் கூடாது என கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Balakrishnan Angry against Anbumani
Author
Chennai, First Published Apr 20, 2019, 3:50 PM IST

அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டி அரசியல் லாபம் தேட முற்படும் இதுபோன்ற விஷமிகளின் செயல்களுக்கு தமிழக மக்கள் இரையாகக் கூடாது என கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

4,000 வாக்காளர்களைக் கொண்ட நத்தமேடு பகுதியில் 4 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த பகுதிகளில், தேர்தல் அன்று பிற்பகலில் இருந்தே பாமகவைச் சேர்ந்த ஏஜெண்டுகள் வாக்களிக்க வருபவர்களிடம் கையில் மை மட்டும் வைத்துவிட்டு, அவர்களின் வாக்குகளை ஏஜெண்டுகள் வாக்களித்திருப்பதாக திமுக புகார் கூறியது. மேலும், அங்கு சிசிடிவி காமிராவும் இருக்கும் இடத்திலிருந்து திருப்பி விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நத்தமேடு போன்ற சம்பவங்களுக்கு அன்புமணியின் பேச்சுகளே அடிப்படைக் காரணம் என்று குற்றம் சாட்டி அறிக்கையில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது; தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் நத்தமேடு வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ள வாக்கு போட்டுள்ளது பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ளது. இங்கு மறுவாக்குபதிவு நடத்திட வேண்டுமென சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது.   அன்புமணி , காஞ்சிபுரம் அருகே திருப்போரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது நாம் மட்டும் தான் பூத்திலிருப்போம், சொல்வது புரிகிறதா? என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பேச்சுக்கள் தான் இந்த சம்பவங்களுக்கு அடித்தளமிட்டிருக்கிறது. அப்போதே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர்,விசிக  தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுவதால், தோல்வி பயத்தால் பாமக மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித் மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தி உள்ளனர். இதில் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக பல வாக்குச்சாவடிகளில் பாமக மற்றும் பாஜகவினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, வாக்களிக்க வந்த மாற்றுக் கட்சியினரை மிரட்டியிருப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது.

இதேபோல் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்திலுள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். வேலு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இளவழகன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வாக்குச்சாவடிக்குள் பகிரங்கமாக அத்துமீறி உள்ளே நுழைய முற்பட்ட போது துணை ராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலும் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், பாஜகவும் இணைந்து பல இடங்களில் சட்டம் - ஒழுங்கை கேள்விக்குறியாக்குகின்ற வகையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டி, தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அரசியல் லாபம் தேடுவதற்காகவே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர் என்று பட்டியலிட்டுள்ள கே.பாலகிருஷ்ணன்.

எனவே, அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் தலித் மக்கள் வீடுகளை சூறையாடியவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

சமூக நல்லிணக்கத்துடன் வாழும் மக்கள் மத்தியில், குறுகிய அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டி அரசியல் லாபம் தேட முற்படும் இதுபோன்ற விஷமிகளின் செயல்களுக்கு தமிழக மக்கள் இரையாகக் கூடாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் கே. பாலகிருஷ்ணன்.

Follow Us:
Download App:
  • android
  • ios