பிரதமர் அறிவித்த ரூபாய் 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பை நாட்டு மக்கள் யாரும் வரவேற்பதாக தெரியவில்லை என இந்தியாவின் மிகப்பெரிய முதலாளிகளில் ஒருவரான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார் .  இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,   ஊரடங்கு காரணமாக பல உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் வேலையில் பஜாஜ் நிறுவனம் எந்த தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பாமல் ஊதியக் குறைப்பையும் அறிவிக்காமல் உள்ளது .  பல மேலை நாட்டு அரசுகள் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவித்து வருகிறது .  அவற்றுக்கு நிறுவனங்கள் மற்றும் மக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்துள்ளன. 

 

ஆனால் இந்தியா அறிவித்துள்ள ரூபாய் 20 லட்சம் கோடி நிவாரண திட்டங்களுக்கு அந்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை ,  நான் இது பற்றி பலருடன் பேசினேன் ,  யாருமே இந்த திட்டங்களை  சிறப்பானது  எனக் கூறவில்லை , மொத்தத்தில் இந்த திட்டங்கள் மக்களை சிறிதும் கவரவில்லை ,  இந்த திட்டங்களுக்கு பதிலாக மக்கள் கையில் உள்ள நேரடி பணத்தை அதிகரிக்க வேண்டும் ,  அதுவும் ஏழை எளியோருக்கு பணம் அளிப்பது மிகவும் அவசியம் ,  அதைப்போல் புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்மாறியோர் அனைவருக்கும் நேரடியாக பணம் அளிக்க வேண்டும் .  ஊரடங்கினால் சுமார் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும் . இது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஸ்டீபன் பியரரிடம்  பேசும்போது அவரது நிறுவன ஊழியர்களின் ஊதியத்தில் 85 சதவீத பங்கை அந்நாட்டு அரசு நிறுவனங்களுக்கு திரும்ப அளித்து விடுகிறது என தெரிவித்தார். அதே போல் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சமாளிக்க  20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களை தொழிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் , இதை ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும்.   

உயிரிழப்பு இல்லாத வறுமையில்லாத  கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.  சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை அனுமதிக்க வேண்டும் ,  அதைத் தவிர்த்து மொத்தமாக பூட்டி வைத்து பின் அனைத்தையும் ஒரே நேரத்தில்  திறக்கும் போது  நோய் நம்மை மொத்தமாக தாக்கும் என அவர் தெரிவித்துள்ளார் .  உள்ளூர் ஓமியோபதி  மருத்துவர்களை ஊக்குவித்து அவர்களின் ஆராய்ச்சிகளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.   மேலும் தற்போதுள்ள நிலையில் அரசால் தொழில் நிறுவனங்களின் தினசரி செலவை ஏற்க முடியாது என்பது உண்மைதான் அதேவேளையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யலாம் .  ஏனோ இது குறித்து சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் வாய் திறக்காமல் உள்ளன  இது மிகவும் வருத்தமளிக்கிறது,  சுதந்திர நாட்டில் நிறுவனங்கள் தங்கள் கருத்து தெரிவிக்காதது சரியானது அல்ல ,  நிறுவனம் குறித்து நாட்டிலுள்ள சாதாரண இளைஞர்கள் பெண்கள் ஏழை தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பேசி வருகின்றனர் ஆனால் தொழில் துறை விளையாட்டுத்துறை திரைத்துறை பிரபலங்கள் இதுகுறித்து வாயை கூட திறப்பதில்லை ஒருவேளை அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படாமல் இருக்கலாம் போலிருக்கிறது என ராஜீவ் கூறியுள்ளார் .