பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்ட செயல் அல்ல எனவும், எனவே அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்வதாகவும் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த  1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்போது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் மசூதியை இடித்ததாக பெயர் தெரியாத லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக முன்னாள் துணைப் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உள்ளிட்டோர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அத்வானி உள்ளிட்டோரை இவ்வழக்குகளிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் 2001-இல் தீர்ப்பளித்தது. அதையே அலகாபாத் உயர்நீதி மன்றமும் 2010ஆம் ஆண்டு உறுதி செய்தது. 

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும் ரேபரேலியில் உள்ள வழக்கை லக்னே சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.  சுமார் 28 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக, லக்னோ நீதிமன்ற வளாகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல் இன்றைய தீர்ப்பில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார், சாத்வி உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை கிடைக்கப் போகிறது எனவும் கூறப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சில முக்கிய பாஜக பிரமுகர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. 

இதனால் லக்னே நீதிமன்ற வளாகம் பரபரப்பு நிறைந்தே காணப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனவே இன்று நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்த நிலையில், லக்னே நீதிமன்ற நீதிபதி  எஸ்.கே யாதவ் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது சுமார் 2000 பக்க தீர்ப்பை  வாசித்த அவர், மசூதி இடிக்கப்பட்டது என்பது திட்டமிட்ட செயல் அல்ல எனவும், அதேபோல் கலவரம் நடந்தபோது அதை தடுக்கவே தலைவர்கள் முயன்றனர் என்றும், இதுவரை இவர்கள் சதி செய்தனர் என்பதற்கான எந்த வலுவான ஆதாரங்களும் இல்லை,  எனவே இந்த வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்கிறேன் என அவர் கூறினார். நீதிபதியின் இந்த அதிரடி தீர்ப்பு பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.