திமுக தலைவர் கருணாநிதியின் கோபால புரம் இல்லத்திற்கு வந்த  அழகிரி கனிமொழியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தந்தையையும் பார்த்துவிட்டு ஆவேசத்துடன் கிளம்பி சென்றார்.

திமுகவுக்குள் வாரிசு சண்டை வெகு நாட்களாக நடந்து வருகிறது. இதில் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி ஸ்டாலின் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அழகிரி மோதலில் ஈடுபட்டதை காரணமாக வைத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அல்லது ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆனார்கள்.

இந்நிலையில் கட்சிக்குள் மீண்டும் வர அழகிரி போராடி வருகிறார். அழகிரியை கட்சிக்குள் இணைக்க திமுக தலைவர் கருணாநிதி எவ்வளவோ முயற்சி எடுத்தும் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

இந்நிலையில் எதிர்கட்சித்தலைவர் பதவியை கருணாநிதியிடம் சண்டை போட்டு கைப்பற்றிய ஸ்டாலின் அடுத்து தலைவர் பதவியை குறிவைத்து காய்களை நகர்த்த கடைசியில் கருணாநிதியின் உடல்நிலையை காரணம் காட்டி செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதன் மூலம் தலைவராகவும் ஆகிவிட்டார்.

கட்சிக்குள்ளேயே வர முடியாத அளவுக்கு அழகிரிக்கு தடை போடப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கனிமொழிக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அழகிரி கடும் ஆத்திரத்தில் இருந்தார். அதில் எண்ணெய் ஊற்றும் விதமாக அழகிரி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் இணைப்போம் என டீ.கே.எஸ் கொம்பு சீவி விட இன்னும் ஆத்திரத்தின் உச்சத்துக்கு போனார் அழகிரி.

இன்று தலைவரை காண கோபால புரம் இல்லத்துக்கு அழகிரி வந்தார். ஏற்கனவே கனிமொழி அங்கு இருந்தார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அழகிரி பொதுக்குழு பற்றி கொதித்திருக்கிறார். அதற்கு கனிமொழி கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார். இன்னும் என்ன அமைதியாக இருப்பது என்று கொந்தளித்த அழகிரி தந்தையை பார்த்துவிட்டு ஆவேசமாக புறப்பட்டு சென்றார்.

வாசலில் பத்திரிக்கையாளர்கள் இருப்பதை பார்த்து பின்வாசல் வழியாக அழகிரி புறப்பட்டு சென்றார்.