40 பேர் வந்தாலும் சரி; 400 பேர் வந்தாலும் சரி... நான் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று மு.க.அழகிரி கூறியதை அடுத்து, திருவாரூரில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு அவரது ஆதரவாளர்கள் பரபரப்புடன் கூட்டத்துக்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

திருவாரூரில் நாளை தன் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். ``40 பேர் வந்தாலும் சரி; 400 பேர் வந்தாலும் சரி, நான் கூட்டத்தில் கலந்துகொள்வேன். வருபவர்கள் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்' எனக் கூற அதற்கான ஏற்பாடுகளை அவரின் ஆதரவாளர்கள் பரபரப்புடன் செய்து வருகின்றனர்.

அதன்படி நாளை நடக்கும் கூட்டத்துக்கு வரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளோம். மேலும், பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பின்னர் காரில் நின்றபடியே பேரணியாக தெற்கு வீதியில் உள்ள கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு வருகிறார். மண்டபத்தில் கருணாநிதியின் படத்துக்கு புகழஞ்சலி செலுத்திவிட்டு ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

நாங்கள் தலைவர் கருணாநிதி சொல்வதுபோல் நான் என்றால் உதடுகள் ஒட்டாது. நாம் என்றால்தான் ஒட்டும் என்கிற வழியில் செயல்படுகிறோம். ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை வராது. ஸ்டாலின் உடன் அண்ணன் அழகிரியும் இணைய வேண்டும். அப்போதுதான் ஓசை வரும் இதைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே செயல்படுகிறோம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.