இடைத்தேர்தலில் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம்; திமுக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தால் அதற்கு நான் என்ன செய்வது? என அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதியின் மறைவிற்கு பிறகு போர்க்கொடி தூக்கிய அழகிரி, திமுகவிற்கு எதிராக தனது ஆதரவாளர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதிக்கு வரும் செப்டம்பர் 5ம் தேதி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். அந்த பேரணியில் தனது ஆதரவாளர்களை குவித்து தன்னுடைய பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார்.

அதற்காக தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திவருகிறார். திமுகவின் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்களையும் இணைக்கும் பணியிலும் அழகிரி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே திமுகவில் தலைவராக உள்ளார் ஸ்டாலின். வரும் 28ம் தேதி ஸ்டாலின் தலைவராக உள்ளார். திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று ஸ்டாலின் தாக்கல் செய்தார். திமுக தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் அக்கட்சியில் நான் இல்லை. அதனால் பதில் சொல்லமுடியாது என்று கூறிவரும் அழகிரி, ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கும் அதே பதிலைத்தான் அளித்தார். 

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அழகிரியிடம், திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாரே என்ற கேள்விக்கு, அதற்கு நான் என்ன செய்ய முடியும்..? என்னை முன்மொழிய சொல்கிறீர்களா? அதைப்பற்றி அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கு வர உள்ள இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என பதிலளித்தார்.