திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் பதவிக்காக மட்டுமே இருப்பதாகவும் உண்மையான தொண்டர்கள் தன் பக்கமே இருப்பதாகவும் அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வினால் அரசியலிலிருந்து ஒதுங்கி முழுமையான ஓய்வில் இருந்துவருகிறார். அதனால் கட்சியை தலைமையேற்று வழிநடத்துவதற்காக ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். கருணாநிதியுடன் ஸ்டாலினின் தலைமைப்பண்பு பரவலாக ஒப்பீடு செய்யப்படுகிறது. ஒரு தலைவரைப் போல் மற்றொருவர் இருக்க முடியாது என்பது எதார்த்தம். ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். 

அந்த வகையில் ஸ்டாலின் தலைமைத்துவத்தின் மீது எத்தனை விமர்சனங்கள் அள்ளி வீசப்பட்டாலும் அவர் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் படுதோல்வியை சந்தித்ததால், திமுக டெபாசிட் இழந்தது. 

இதையடுத்து கட்சியை மேலும் பலப்படுத்தும் விதமாகவும் நிர்வாகிகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் விதமாகவும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். எந்தெந்த நிர்வாகிகள் மீது அதிகமான புகார்கள் எழுந்தனவோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கட்சியில் அதிரடியான களையெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் மதுரை, தேனி, ராமநாதபுரம், குமரி, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் சில நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 

திமுகவின் தென்மாவட்ட பொறுப்பை முன்பு அழகிரி நிர்வகித்துவந்தார். தென்மாவட்டங்கள் அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் கட்சியிலிருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டதால், அழகிரியால் தென்மாவட்டங்களில் கட்சி சார்ந்த விஷயங்களில் தலையிட முடியவில்லை. இந்நிலையில், தென்மாவட்ட நிர்வாகிகளை ஸ்டாலின் அண்மையில் அதிரடியாக மாற்றியிருந்தார். 

இந்த நிலையில், மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அழகிரி, ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது பேசிய அழகிரி, திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக மட்டுமே இருக்கின்றனர். ஆனால் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர். சென்னையில் இருப்பவர் செயல்படாத தலைவர். பாலமேட்டில் இருப்பவர்கள் தான் செயல்படும் வீரர்கள் என ஸ்டாலினை விமர்சித்து பேசினார். 

ஏற்கனவே ஆட்சியாளர்களும் அதிமுகவினரும் ஸ்டாலினை செயல்படாத தலைவர் என விமர்சித்துவரும் நிலையில், தற்போது அழகிரியும் வெளிப்படையாக விமர்சித்திருப்பது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.