அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளன்று எந்தவொரு தரப்பினரும் வெற்றி ஊர்வல கொண்டாட்டங்களை மேற்கொள்ள கூடாது என அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக முடிவில்லாமல் இழுத்து வந்த அயோத்தி நில பிரச்சினை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் சில நாட்களில் தனது தீா்ப்பை சொல்ல உள்ளது. இந்த தீர்ப்பை நாடே எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இந்நிலையில், அயோத்தி தீர்ப்பால் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் அஞ்சு குமார் கடந்த மாதம் 31ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பெரிய தலைவர்கள் மற்றும் எந்தவொரு தெய்வங்களையும் அவமதிக்கும் வகையில் டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்ய கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கடவுளின் சிலையையும் நிறுவ கூடாது. அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளில் வெற்றி ஊர்வலங்களும் நடத்த கூடாது.
வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்த கூடாது. அரசு ஊழியர்களை தவிர வேறு யாரும் நகரில் ஆயுதங்களை கையில் எடுத்து செல்ல கூடாது. அனுமதி இல்லாமல் எலக்ட்ரானிக் ஊடகங்களில் அனுமதி இல்லாமல் விவாதங்கள் நடத்த கூடாது.
கார்த்திக் புர்ணிமா, சவுதாரி சரன் சிங் பிறந்தநாள், குருநானக் ஜெயந்தி, ஈத் உல் மிலாத் மற்றும் கிறிஸ்மஸ் உள்ளிட்ட பண்டிகைகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28ம் தேதி வரை 144 தடை உத்தரவின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 118ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 4, 2019, 8:02 PM IST