சென்னை மெரினா கடற்கடையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தி அதன் பின்பு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழக அரசின் சார்பில் விருதுகள் விழாவில் பங்கேற்று விருதாளர்களுக்கு விருது, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

விருது வழங்கி முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி திருக்குறளின்படி, தமிழகத்தில் அமைந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும்.

தமிழ் வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ் கவிஞர்கள் நல்ல நகைச்சுவையுடன் ஆழ்ந்த கருத்துகளை எழுதி வருகின்றனர். விருதுகள் கொடுப்பது இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை தூண்டும் என்றார்.

முன்னதாக நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா என்ற பாடலையும் பாடி அசத்தினார். அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருதுகளை 9 பேருக்கு முதல்வர் பன்னீர் செல்வம் வழங்கினார்.

அதன்படி புலவர் வீரமணிக்கு திருவள்ளுவர் விருது, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது, மருத்துவர் துரைசாமிக்கு அம்பேத்கர் விருது, கவிஞர் கூரம் துரைக்கு அண்ணா விருது, நீலகண்டனுக்கு காமராஜர் விருது, பேராசிரியர் கணபதிராமன் பாரதியார் விருது,கவிஞர் பாரதிக்கு பாரதிதாசன் விருது, பேராசிரியர் மறைமலை இலக்குவனார்க்கு திரு.வி.க விருது,மீனாட்சி முருகரத்தினத்திற்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதி சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.

மேலும், வயது முதிர்ந்த, 50 தமிழறிஞர்களுக்கு, நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப்பட்டன