நான் விரைவில் எனது சுயசரிதையை எழுதுவேன் ஆனால் அது பலருக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ராம மோகன் ராவ் அவரது மகன் விவேக் மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் பல கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்போது இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதன் எதிரொலியாக தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து  அவர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்திய வரலாற்றில் எங்கும் நடந்திராத வகையில் முதல் முறையாக ஒரு தலைமை செயலாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையாக அது கருதப்பட்டது. 

ஆனால் இன்னும் கூட அந்த வழக்கில் மர்மம் உடைபடவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக தெலுங்கு மொழி பேசும் சமுதாயத்தினரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அவர் தற்போது அரசியல் ரீதியான கருத்துக்களையும் கூறத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதுரை ஹிந்து ஜனநாயக பிரண்ட் என்ற அமைப்பின் செயற்குழு கூட்டத்தில்  ராம மோகன் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழகத்தில் கோயில்களை நம்பி பத்து லட்சம் குடும்பங்கள் உள்ளன. கோயிலில் வரும் பொருளாதாரத்தை நம்பியே அக்குடும்பங்கள் உள்ளன. வறுமைக்கோட்டிற்கு கீழ் மிகவும் அரசின் எந்த உதவியும் இல்லாமல் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 

அவர்களுக்கு இலவச வீட்டு மனை, மாத உதவித்தொகை கிடைக்க அரசிடம் வலியுறுத்துவேன். முன்னாள் முதல்வர் ஜெயலிதா மரண விவாகரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அது குறித்து கருத்து கூற இயலாது. தமிழகத்தில் உள்ள 42 சதவீத சமுதாயங்கள் அரசியலில் முன்னேறுவதற்கு வழிகாட்டுகிறேன். பெரும்பாலானோர் அரசியல் தொடர்பே இல்லாமல் உள்ளனர் என்றார். தமிழக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு கொடுப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என கூறினார். விரைவில் எனது சுயசரிதையை எழுதுவேன் என்ற அவர் அது  பலருக்கும் பிரச்சினையை உருவாக்கும் என்றார். இப்போது என்னைப் பற்றி எல்லாமே தவறாக பேசுகிறார்கள் என்ற அவர் இதை வெறும் நகைச்சுவையாக தான்  கூறினேன் என கூறினார்.