தமிழகத்தில் மாற்றம் நடக்க வேண்டும் என்றால், ரஜினியால் மட்டுமே அது முடியும். அவர் அரசியலுக்கு வந்தால்தான் அது நடக்கும் என்று ‘துக்ளக்’ ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 'துக்ளக்' வார இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் திருச்சியில் நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் ‘துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பங்கேற்று இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினார்.  “மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு பிறகு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அரசியல் நாடகங்கள் மூலம் அங்கே காட்சிகள் மாறியுள்ளன. அந்த மாநிலத்தில் இன்னும் என்னென்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.
ஜெயலலிதாவை ஏற்று அவரை ஆதரித்த அதிமுகவினர், அவருடைய மறைவுக்கு பிறகு சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை.  தமிழகத்தில் ஒரு பக்கம் கொள்ளைக் கூட்டம், இன்னொரு பக்கம் ஒரு குடும்பமே கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்தி திமுகதான். பதவியிலிருந்து விலகிய பிறகு, நான் சொல்லிதான் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் தொடங்கினார். அதன் மூலம் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது. இரு பிரிவுகளாக இருந்த அதிமுகவை ஒன்றிணைத்ததும் நான்தான்.


இங்கே தமிழருவி மணியன் பேசும்போது, தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பேசினார். நான் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார். தமிழகத்தில் ஆட்சியை கலைக்க நான் சொல்ல முடியாது. நான் சொல்லுவதை அவர்கள் (பாஜக) ஏற்றுக்கொள்வார்களா என்றும் தெரியவில்லை.

 
தமிழகத்தில் மாற்றம் நடக்க வேண்டும் என்றால், ரஜினியால் மட்டுமே அது முடியும். அவர் அரசியலுக்கு வந்தால்தான் அது நடக்கும். ரஜினி அரசியலுக்கு வருவதற்கான விதையை விதைத்தவர்கள் சோ, தமிழருவி மணியன் ஆகியோர்தான். பாஜகவை நாம் எதிர்ப்பதில்லை என்கிறார்கள். பாஜக ஆட்சியில் தவறு செய்தாலும், அதை ‘துக்ளக்’ விமர்சிக்கும்” என்று குருமூர்த்தி பேசினார்.