காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காண கிடைக்கும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். கூட்டநெரிசலில் சிக்கி 4  பக்தர்களும் உயிரிழந்துள்ளனர். 

இதற்கு எதிர்க்கட்சிகளோ கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி, அத்திவரதரை தரிசிக்க வருவோருக்கும், வரதராஜ பெருமாள் கோவிலின் பகுதிகளிலும் தகுந்த பாதுகாப்பு வசதிகளும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அத்திவரதர் தரிசனத்திற்கு, பொது மக்களுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலர் சண்முகம் கூறியுள்ளார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம்  பேசிய முதலமைச்சர் : தமிழகத்தில், நிதி ஆதாரத்தை பெருக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல், மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதியை பெற, நடவடிக்கை எடுத்து வருகிறோம். அணை பாதுகாப்பு மசோதா, கடந்த முறை விவாதத்துக்கு வந்த போதே, அதை எதிர்த்து, நிறுத்தி வைத்தோம். இப்போது, அந்த மசோதாவை எதிர்த்து, பார்லிமென்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.

கேரளாவிலுள்ள பல்வேறு அணைகள், தமிழகத்தின் நிர்வாகத்தில் உள்ளன. அதை காக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்க, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, அத்தி வரதரை இடமாற்றம் செய்ய முடியுமா என, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.