ஒரு அமைச்சராக இருந்தும் பொறுப்பில்லாமல் கண்டபடி பேசுகிறார் என்று சொல்லும் திமுகவினர், ஒரு அமைச்சர் என்றும் பாராமல் அவரை ஒருமையில் பேசுவதால் பதிலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டபடி பேசுவதும் அதற்கு பதிலடி கொடுப்பதுமாக தமிழக அரசியல் களம் சூடேறியிருக்கிறது.

வாயைத் திறந்தால், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன்,நாக்கை அறுப்பேன் என்பதுதான் அவரது பாணியாக உள்ளது. தி.மு.க. தொண்டர்கள் வீட்டுக் கதவை உடைப்போம். சட்டை கிழிப்போம் என்கிறார் ராஜேந்திரபாலாஜி.

ஐ.நா. அதிகாரியைப் போல உலகப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கும் அவர், தி.மு.க. ஆட்சிஅமைந்ததும் புழல்சிறைவாசம் செய்யப்போகும் மனிதர் தான் என்பதை அவருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் நினைவுபடுத்துகிறேன் என்று காட்டமாக பேசியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓராண்டு தண்டனை கொடுத்தால் ராஜேந்திரபாலாஜி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி, 'ஐந்து ஆண்டுகள் நக்கி பிழைத்தது ஸ்டாலின் தான். சங்கி என்று சொல்பவர்களுக்கு திஹார் ஜெயில் தயாராக உள்ளது.விட்டால் ஸ்டாலின் எங்களையெல்லாம் சுட்டுக்கொன்று விடுவார் போலிருக்கிறது. ஒழுக்கமாகப் பேசினால் ஒழுக்கமாக நாங்களும் பேசுவோம். இல்லாவிட்டால் அசிங்கமாக பேசுவோம்’’என கூடுதலாக குண்டை வீசியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் அடாவடி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.., ‘’அரண்மனை நாயே அடக்குடா வாயை.! ராஜேந்திர பாலாஜி நாவை அடக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் திமுக தொண்டன் அதை செய்வான்.!’’ என்று கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார். முன்னாள் இன்னாள் அமைச்சர்களின் அடாவடி பேச்சுக்கள் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறது.