தென்மாவட்ட அதிமுகவில், தான் இழந்த செல்வாக்க மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியில் இருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா இறந்த பிறகு  கட்சி பிளவுபட்ட நேரத்தில் ஓ.பி.எஸுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து அவர் பின்னால் நின்றவர்கள் மதுரையை சேர்ந்த முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணனும், தற்போதைய எம்.எல்.ஏ., மாணிக்கமும்தான். இவர்களின் விசுவாசத்திற்காக, இலைகட்சியின் ஆட்சியின் வழிகாட்டுதல் குழுவில் இவர்களை இடம் பெயரச்செய்தார், ஓ.பி.எஸ். கோபாலகிருஷ்ணன், ஓ.பி.எஸ் மதுரை வரும்போது மட்டும் அவருடன் இருப்பாராம். எடப்பாடி பழனிசாமி வரும்போது கண்டுகொள்வதே இல்லை என்ற புகார் கட்சி வட்டாரத்துக்குள்ள இருக்கிறது. 

வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு மதுரை கிழக்குத்தொகுதியில் சீட் வேண்டும் என ஓ.பி.எஸிடம் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் கோரிக்கை  வைத்திருக்கிறாராம். இதற்கு ஓ.பி.எஸ் ஓ.கே சொல்லிவிட்டு, பதிலுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறாராம். அதாவது, தென்மாவட்டங்களில் வசிக்கும் எம்.பியின் சமூகத்தினரின் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து ரகசியமாக சர்வே எடுத்து, தனக்கு தகவல்தர வேண்டும் என்பது தான் அந்த அசைன்மெண்ட்.

இந்த சர்வே தகவல்களை தேர்தல் நேரத்தில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டமாம். இங்கே தான் பிரச்னையே ஆரம்பித்துள்ளது. சமூகத்தின் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வேலையில் முன்னாள் எம்.பி தற்போது தீவிரமாக இருக்கிறாராம். இவர் ஏற்கனவே மதுரையில் எம்.பியாக இருந்தபோது, நமது சமூகத்திற்கு என எதுவும் செய்யவில்லை. கண்டுகொள்ளவும் இல்லை. இனிமேல் எப்படி இவர் செய்வார் என சமூக பிரமுகர்கள், அவரை சந்திக்க மறுக்கிறார்களாம். இதனால் கோபால கிருஷ்ணன் கதிகலங்கியுள்ளார் என்கிறார்கள்.