பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28ம் தேதி கூட உள்ளது. மானியக்கோரிக்கை பட்ஜெட் விவாதத்திற்காக இந்தக் கூட்டத் தொடர் கூட்டப்படுகிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி, சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அன்றைய தினம் கூட்டத் தொடர் முதல் நாளில் ஒத்தி வைக்கப்படும்.

25 நாட்களுக்கு குறையாமல் இந்தக் கூட்டத்தொடர் நறைபெறும் எனக் கூறப்படுகிறது. அப்போது தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை, இரட்டை தலைமை, உள்ளாட்சி தேர்தல், சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரில் எழுப்ப திமுக திட்டமிட்டு இருக்கிறது. 

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ள இந்லையில் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ளது. அதிமுகவுக்கு 122 உறுப்பினர்கள் உள்ல நிலையில் அதனை எதிர்கொள்ள அதிமுக அரசு தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் நடந்து முடிந்து மேலும் எம்.எல்.ஏக்கள் பலத்துடன் திமுக சட்டப்பேரவைக்கு அடியெடுத்து வைப்பதால் இந்தக் கூட்டத்தொடர் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளை கிளப்ப திமுக உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.