அதிமுக இரண்டு அணியாக பிரிந்ததையடுத்து ஓ.பி.எஸ்சும், சசிகலாவும் தமிழகத்தில் யார் பலத்தை நிரூபிக்கிறார்கள் என்ற போட்டி நிலவி வருகிறது.

சசிகலா தரப்பு ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் விலை போயுள்ளனர் என்றே ஓ.பி.எஸ் தரப்பில் குற்றசாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

மக்கள் மனதில் பெரும்பாலும் பேசப்படுவது ஓ.பி.எஸ் தரப்பினரை பற்றிதான். காரணம், மக்களின் பெரும்பாலோரின் மனதில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலாவே காரணம் என்ற நீக்கமுடியாத வடு அமைந்துள்ளது. அதற்கு ஏற்றார்போலதான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவின் நடவடிக்கையும் இருந்தது.

எனவே சசிகலாவிடம் இருந்து ஓ.பி.எஸ் பிரிந்து அவருக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியதால் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவு பெருகியது என்றே சொல்லலாம்.

ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் வெளியே வந்ததால் சசிகலாவின் பாடு திண்டாட்டமாகி உள்ளது.

தற்போது சொத்துவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ளார்.

அவருக்கு பின் கட்சியை அவரது உறவினரான டி.டி.வி தினகரன் தான் நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் சர்வாதிகாரியாக செயல்படுவதாக கூறி கட்சிக்குள் பல குளறுபடிகள் ஏற்பட்டுவருவதாக தெரிகிறது.

இதனிடையே ஓ.பி.எஸ் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி திருவள்ளுவர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது எண்ணத்திற்கு மாறாக சசிகலாவின் கையில் கட்சியும் ஆட்சியையும் சென்றுள்ளது.

இதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நமது அணிதான் உண்மையான அதிமுக அணி. விரைவில் தலைமை கழகமும் இரட்டை இலையும் நமது கையில் வந்து சேரும்.

இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் சட்டமன்றத்தில் 122 எம்.எல்.ஏக்களின் பலத்தை நிரூபித்து இருக்கலாம். ஆனால் சட்டமன்றத்தை விட மக்கள் மன்றமே மிகப்பெரியது.

இந்த ஆட்சியை கலைப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஓ.பி.எஸ் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

சசிகலாவின் பினாமி ஆட்சியை மாற்றி அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.