மயிலாடுதுறை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக மல்லு கட்டி வருகிறது. 

தமிழகத்தில் 38வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை மாவட்டம்.  மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 54 ஊராட்சிகளையும், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 ஊராட்சிகளையும், குத்தாலம், மணல்மேடு ஆகிய 2 பேரூராட்சிப் பகுதிகளையும், மயிலாடுதுறை நகராட்சியின் 36 வார்டு பகுதிகளையும் உள்ளடக்கியது மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி.

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, அதிமுக கூட்டணி அமைத்து மயிலாடுதுறையில் போட்டியிட்டனர். இதில், தொகுதிக்கு புது முகமான காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமாரிடம்  மகாலிங்கம் தோல்வியடைந்தார். மதிமுக சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞரும், வழுவூர் ஊராட்சி மன்றத் தலைவரும், வழுவூரில் பிரபல குடும்பமான மாணிக்க படையாட்சி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம் படையாட்சி மகன் மகாலிங்கம் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2006ல் மதிமுகவில் இருந்த நிர்வாகிகளில் 90% தற்போது அக்கட்சியில் இல்லை . 10 சதவீத நிர்வாகிகள் மட்டுமே மீதம் உள்ளார்கள். 

இந்நிலையில் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் மயிலாடுதுறையில் மதிமுக சார்பில் போட்டியிட தொகுதிக்கு வெளியே இருக்கிற இரண்டு பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ஒருவர் ஆடுதுறையை சேர்ந்த முருகன். மதிமுகவின் மாநில விவசாய அணி செயலாளராக உள்ளார். வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல மற்றொரு மதிமுக விருப்ப வேட்பாளரான மார்க்கோணி, சீர்காழியை சேர்ந்தவர். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் மீதும் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது. சீர்காழி தாண்டி இவருக்கு எந்த அறிமுகமும் கிடையாது. 

மயிலாடுதுறை தொகுதியில் மதிமுக சார்பில் வெளியூரிலிருந்து வந்து போட்டியிட்டால் வெற்றி  பெறுவது இயலாத காரியமாகும். மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மண்ணின் மைந்தரான மகாலிங்கம், மதிமுக வலுவாக இருந்த 2006இல் வெற்றி பெற இயலாத நிலையில், தற்போது 10 சதவீதம் நிர்வாகிகள் கூட இல்லாத  மதிமுகவில் வெளியூர் வேட்பாளர்கள் போட்டியிட்டால் தொகுதி அதிமுகவுக்கு சாதகமாகி விடும் என்று கூறப்படுகிறது. ஆகையால், மதிமுகவிற்கு கொடுக்காமல் திமுகவே நல்ல வேட்பாளரை களமிறக்க வேண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.