கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை. அவரை கூட்டணிக்கு வரவேற்கிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

ராகுல்காந்தி எம்.பி. வருகிற 23-ந் தேதி முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு திருப்பூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ராகுல்காந்தியின் வருகை கொங்கு மண்டலத்தில் எழுச்சிகரமானதாக இருக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை விட 5 மடங்கு அதிக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். பொதுமக்களை சந்திக்க வரும் அவர் கோவையில் தொழில்துறையினருடனும், திருப்பூரில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

புதுச்சேரியில் எத்தகைய அரசியல் சூழல் நிகழ்ந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அங்கு நண்பர்களுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறோம். தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

மேலும், மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்போம் என்றும், மிகப்பெரிய அணியாக இருக்கும் எங்களுடன் கமல் சேர வேண்டும். பிரிந்து நின்றால் அது ஓட்டுக்களை சிதறடிக்கும் என்று கூறி கமல்ஹாசனுக்கு கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.