உள்ளாட்சி தேர்தல் ஓர் இடைவேளைதான். சட்டப்பேரவை தேர்தல்தான் கிளைமாக்ஸ். விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.


விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலையில் கலைஞர் அறிவாலயம் வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
 “திருவாரூர் கருணாநிதியை கலைஞர் கருணாநிதி என்று மாற்றிய ஊர் விழுப்புரம். கருணாநிதி சாமானியர்களுக்காக ஆட்சி நடத்தியவர். திமுக ஆட்சியின்போதெல்லாம் சாமானிய மக்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றினார். இன்று நடந்துகொண்டிருக்கும் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியால் இதுபோல ஒரு சாதனை பட்டியலை கொடுக்க முடியுமா? சட்டம்-ஒழுங்கை நாங்கள்தான் முதலிடம் என்கிறார்கள். இதை சொல்ல உங்களுக்கு கூச்சமாக இல்லையா? பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ. வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். போலீஸ் உயிருக்கே பாதுகாப்பு இல்லை, இதைவிட ஒரு சாட்சி தேவையா?
ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களை இன்றைக்கு ஓ.பன்னீர்செல்வம் காப்பாற்றி கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வருவதுதான் எங்கள் முதல் வேலை. கோடநாடு சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே போனது? அந்த வழக்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்றெல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும். இதற்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது உங்களது வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுவோம். இதை மறந்துவிடாதீர்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுகவினர் ஆதரிக்கிறார்கள். இதுபற்றி சட்டமன்றத்தில் பேசினால், அதற்கு தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது, எங்கும் கலவரம் இல்லை என்கிறார்கள். தமிழக மக்கள் அமைதியாகப் போராடுகிறார்கள். ஆனால், இந்தியா  கொழுந்துவிட்டு எரிகிறது. ஆனால், எடப்பாடி ஏதோ சட்டமேதை போல பேசி வருகிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போராடுகிறவர்கள் எல்லாம் முட்டாள்களா? உங்களுடைய நாடகம் எதுவும் செல்லுபடியாகாது என்பதற்கு உதாரணம்தான் உள்ளாட்சி தேர்தல் வெற்றி. ஆனால், இதைபற்றி அவர்களிடம் கேட்டால் நாங்கள் வளர்பிறை, திமுக தேய்பிறை என்பார்கள்.
மாவட்ட கவுன்சிலர் பதவி 512-ல் திமுக 242 இடங்களில் வென்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவி 5076-ல் 2090 இடங்களில் திமுக வென்றுள்ளது. அப்படியானால், எது வளர்பிறை, எது தேய்பிறை? அதிமுக தோற்றதை வெற்றி எனவும் திமுக வெற்றி பெற்றதை தோல்வி எனவும் அறிவித்தனர். சில இடங்களில் தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தேர்தல் விதிகள்கள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 20 இடங்களில் நிச்சயம் திமுகதான் வெற்றி பெறும்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் ஓர் இடைவேளைதான். சட்டப்பேரவை தேர்தல்தான் கிளைமாக்ஸ். விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடிக்கும். அதைத் தடுக்க ஆளும் கட்சியினர் மட்டுமல்ல, சில ஊடகங்களும் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். கருணாநிதி சந்திக்காத சதிகளா? தோல்வியைக் கண்டு துவண்டு மூலையில் முடங்குகிற இயக்கம் அல்ல திமுக.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.