சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து பேசியதன் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் ஆரம்ப கட்டப்பணிகளில் ரஜினி பிசியாக உள்ளார். இந்த படத்திற்காக ரஜினி சிறிது உடல் எடையை கூட்ட வேண்டும் என்று சிறுத்தை சிவா கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக உடல் எடையை அதிகரிக்கும் வேலையில் ரஜினி மும்முரமாக உள்ளார். மேலும் படத்திற்கான கதாபாத்திர தேர்வு குறித்தும் ரஜினி – சிறுத்தை சிவா – சன் பிக்சர்ஸ் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.

இந்த நிலயில் திடீரென தமிழருவி மணியன் நேற்று காலை போயஸ் கார்டன் சென்றார். வழக்கமாக ரஜினி, நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திக்கும் காலை 10 மணி தான் தமிழருவி மணியனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மற்றவர்கள் பத்து நிமிடங்களில் ரஜினி வீட்டில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் தமிழருவி மணியன் சுமார் 1 மணி நேரம் உள்ளே இருந்தார்.

வெளியே வந்த அவர், நண்பர் என்ற அடிப்படையில் ரஜினியை சந்தித்ததாக கூறினார். மற்றபடி ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக ஏற்கனவே தான் கூறிவருவதையே தமிழருவி மணியன் மீண்டும் கூறினார். புதிதாக எந்த தகவலையும் பெற முடியவில்லை. செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் லாவகமாக பதில் அளித்து தப்பினார் தமிழருவி. ஆனால் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் மட்டும் தமிருருவி சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதன்படி ரஜினி அடுத்த ஆண்டு மே மாதம் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று அடித்து கூறியுள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் கூட்டணிஅமைய வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளதாகவும் அது குறித்து தன்னிடம் சீரியசாக பேசியதாகவும் கூறுகிறார். மேலும் 2009ம் ஆண்டு தேர்தலில் திமுக – அதிமுகவிற்கு மாற்றாக பாஜக கூட்டணியை தமிழருவி மணியன் முன்னின்று அமைத்தது குறித்தும் ரஜினி சில தகவல்களை கேட்டதாக சொல்கிறார்கள்.

மேலும் கமல் கட்சியின் உண்மையான பலம், விஜயகாந்த் கட்சியின் தற்போதைய நிலை, சீமானின் பேச்சுகள், திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடு, ராமதாஸ் – அதிமுக நெருக்கம் போன்றவை குறித்தும் ரஜினி – தமிழருவி பேசியதாக கூறுகிறார்கள். தனியாக களம் இறங்குவதை காட்டிலும் கூட்டணி அமைத்து களம் இறங்குவது தான் திமுக – அதிமுகவை சமாளிக்க சரியாக இருக்கும் என்கிற கருத்து ரஜினிக்கு ஆழமாக இருப்பதை தமிழருவி வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக கூறி வருகிறாராம்.