மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பொதுமக்களுக்காக இயக்கப்பட்டு வரும், 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள், இன்று (08.12.2020) காலை முதல் வழக்கம்போல தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து 100% இருக்கைகளுடன் பேருந்து இயக்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், முதலில் 60 சதவீத இருக்கைகளுடன் பொது போக்குவரத்து இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாவது உத்தரவில் 7-9- 2010 முதல் மாநிலம் முழுவதும் பொதுப்போக்குவரத்து இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பள்ளி கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 100% இருக்கைகளுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகளை இயக்குவதற்கும், தேவையின் அடிப்படையில் பேருந்துகளின்  எண்ணிக்கையை அதிகரிக்கவும் அனுமதிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக, 32 பணிமனைகளைச் சார்ந்த அனைத்துப் பணியாளர்களும் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், COVID-19 நோய்த் தொற்று காலங்களில், 60% பயணிகள் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்த உத்தரவினை தளர்த்தி, 100% பயணிகள் பயணத்திட நேற்றைய தினம் தமிழ்நாடு அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனடிப்படையில், அரசின் நிலையான வழிக்காட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணிகள் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.