அப்துல் கலாமை மத்திய அரசு கேவலப்படுத்திவிட்டது என்று ஸ்டாலின் சிறுமைபடுத்தலாமா என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபம் இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம், பேக்கரும்பு இடத்தில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.

மணிமண்டபம் திறக்கப்பட்ட உடன், அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

அந்த சிலையின்கீழ், பகவத்கீதை புத்தகம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஸ்டாலின் தமிழ்நாட்டில் மதவாதம் திணிக்கப்படுவதாகவும், அப்துல்கலாம் மணிமண்டபத்தில் நியாயமாக திருக்குறள் புத்தகத்தை வைத்திருந்தால் பாராட்டியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும், பகவத் கீதைக்கு நாங்கள் எதிர்ப்பானவர்கள் அல்ல என்றும், மத்திய அரசு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமை கேவலப்படுத்தி அரசியலுக்காக ஆதாயம் தேடுவதாக குற்றம் சாட்டினார்.  

இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், அப்துல் கலாமை மத்திய அரசு கேவலப்படுத்திவிட்டது என்று ஸ்டாலின் சிறுமைபடுத்தலாமா எனவும், மணிமண்டபம் கட்டி அப்துல்கலாமுக்கு மத்திய அரசு பெருமை சேர்த்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.