Asianet News TamilAsianet News Tamil

ஏசியா நெட் தொடர் செய்தி எதிரொலி! நில அபகரிப்பு புகாரால் பதவி இழந்த கேரள அமைச்சர் தாமஸ் சாண்டி!

Asianet reporter only exposed resigned Kerala ministers illegal things do story
Asianet reporter only exposed resigned Kerala ministers illegal things do story
Author
First Published Nov 17, 2017, 9:58 AM IST


விவசாய நிலத்தை ஆக்கிரமித்து ஆடம்பர விடுதி கட்டிய கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர்  தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏசியா நெட் தொலைக்காட்சியில் நில ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்த செய்தியால் தான் இந்த மோசடி வெளிவந்துள்ளது

கேரளத்தில் மாநில அரசுப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் தாமஸ் சாண்டி. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், தனது தொகுதியான ஆழப்புழாமாவட்டம் குட்டநாடு பகுதியில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து ஆடம்பர விடுதி கட்டியதாக புகார் எழுந்தது.

ஏசியா நெட் தொலைக் காட்சியின் செய்தியாளர்  பிரசாத் தொடர்ந்து இது குறித்து பல புலனாய்வுகளை மேற்கொண்டார். பல மிரட்டல்களுக்கிடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 35 க்கும் மேற்பட்ட செய்திகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

இந்த செய்தியின் அடிப்படையில்  குட்டநாடு பகுதியில்  ஆய்வு நடத்திய ஆலப்புழா மாவட்ட  ஆட்சியர் டி.வி. அனுபமா, இது குறித்த உண்மையை கண்டறிந்து , தாமஸ்சாண்டி  நிறுவனத்தின் ஆக்கிரமிப்பை  உறுதிப்படுத்தி அரசுக்கு அறிக்கை அளித்தார்.

ஆனால் மாவட்ட ஆட்சியரின்  அறிக்கையை ரத்து செய்யக் கோரி, கேரள  உயர் நீதிமன்றத்தில்  தாமஸ் சாண்டி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “ஆட்சியில் அங்கம்  வகிக்கும் நீங்கள், அரசுக்கு எதிராக  மனு தாக்கல்  செய்வதற்குப் பதிலாக,  அமைச்சர் பதவியிலிருந்து ஏன்,  விலகக் கூடாது?”  என்று கேள்விஎழுப்பியதுடன் மனுவையும் தள்ளுபடி செய்தது..

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, இடது ஜனநாயக முன்னணி கட்சிகளும், தாமஸ் சாண்டியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தின.

அதே நேரத்தில் நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக தாமஸ் சாண்டியிடம்  பேசியிருப்பதாகவும், அப்போது, தனது கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி விட்டுபதிலளிப்பதாக சாண்டி கூறியிருப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், கேரள அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர்  பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின்  முடிவில், அமைச்சர் தாமஸ் சாண்டி, தனதுபதவியை ராஜினாமா செய்து, முதல்வர் பினராயி விஜயனிடம் கடிதம் அளித்தார்.

தொடர் செய்தியால் ஒரு மிகப்பெரிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்த ஏசியா நெட் தொலைக்காட்சிக்கு கேரள மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios