இபிஎஸ் ஒபிஎஸ்சை அரவணைத்தது போல், டிடிவி தினகரனையும் அழைத்து பேச வேண்டும் எனவும் நம்பிக்கை வாக்கெடுக்கும் சூழ்நிலை வரும்நிலையில் அப்போது எங்கள் முடிவு குறித்து அறிவிக்கப்படும் எனவும்  கொங்கு பேரவையின் தனியரசு தெரிவித்தார்

அதிமுக இரண்டு அணியாக இருந்த போது கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். அப்போது எடப்பாடி தரப்பில் டிடிவி தினகரனும் எதிர்தரப்பில் ஒபிஎஸ்சும் இருந்தனர். 

ஆனால் தற்போது எடப்பாடியும் பன்னீரும் கைகோர்த்துள்ளனர். இதனால் டிடிவிக்கு என்று தனி அணி உருவாகியுள்ளது. 

இந்நிலையில், கூட்டணி எம்.எல்.ஏக்கள் டிடிவி தரப்புக்கு ஆதரவு தருவதா இல்லை எடப்பாடி பன்னீர் தரப்புக்கு ஆதரவு தருவதா என்ற கேள்விக்குறியில் நின்று கொண்டு இருக்கின்றனர். 

இதனிடையே எடப்பாடி தரப்பும் பன்னீர் தரப்பும் பாஜகவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில், பலதரப்பு முடிவுகளை எடுத்து வந்தனர். இது கூட்டணி எம்.எல்.ஏக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. 

தமிமுன் அன்சாரி ஒரு படி மேலே போய் பாஜகவுடன் கூட்டணி இருந்தால் எடப்பாடிக்கு ஆதரவு தரமாட்டேன் என வெளிப்படையாகவே கூறிவிட்டார். 

இருந்தாலும் அவ்வாறு இல்லை என்றும், தமிழக அரசின் தேவைகளை பூர்த்தி செய்யவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் எனவும் எடப்பாடி தரப்பு கூறிவருகின்றது. 

இதனிடையே பேசிய கருணாஸ் தமிழக அரசியல் சூழ்நிலைகளை உற்று கவனித்து வருவதாகவும் விரைவில் முடிவு அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று சென்னை எம்.எல்.ஏக்கள் விடுதியில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் எந்த அணிக்கு ஆதரவு தருவது என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தனியரசு, பேரறிவாளன் விடுவிப்பு குறித்து எடப்பாடி அரசு நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், பாஜகவின் அழுத்தத்தால் அதிமுக இறையாகி விடக்கூடாது எனவும் தெரிவித்தார். 

இபிஎஸ் ஒபிஎஸ்சை அரவணைத்தது போல், டிடிவி தினகரனையும் அழைத்து பேச வேண்டும் எனவும் நம்பிக்கை வாக்கெடுக்கும் சூழ்நிலை வரும்நிலையில் அப்போது எங்கள் முடிவு குறித்து அறிவிக்கப்படும் எனவும் தனியரசு தெரிவித்தார்.