As people cheat people in cinema in real life Tamil people can not be fooled

திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவது போல், நிஜ வாழ்க்கையில் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதிய அவர், திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவது போல், நிஜ வாழ்க்கையில் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என குறிப்பிட்டிருந்தார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று கூறியது முற்றிலும் தவறு என சுட்டிக்காட்டி இருந்தார்.

காலா திரைப்படத்தின் நோக்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பி இருந்த அவர், மத்திய மாநில அரசுகளை எதிர்ப்பது மற்றும் காவல் துறையை தவறாக சித்தரிப்பது ஒன்றே காலா திரைப்படத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும், காலா திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்காமல் இருப்பதற்காக மட்டுமே தூத்துக்குடி சென்று வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், காலா திரைப்படத்தில் மக்களை போராட அழைக்கும் ரஜினிகாந்த், நிஜ வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்க்கும் நபராகவும், ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் எனப் போனால் தமிழகம் சுடுகாடாகிப்போகும்’ எனவும் கூறி மக்களை முகம் சுளிக்க வைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் ரஜினிகாந்த் அரியணை ஏற நினைத்தால், அப்படி அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஏமாற்றம் ஒன்றே மிச்சமாகும் என அவரது கடிதத்தை நிறைவு செய்திருந்தார்.